3197.

    ஆரமுதம் அனையவள்என் அம்மைஅபி ராமி
        ஆனந்த வல்லியொடும் அம்பலத்தே விளங்கும்
    பேரமுத மயமாம்உன் திருவடிவைக் குறித்துப்
        பேசுகின்ற போதுமணம் வீசுகின்ற தொன்றோ
    சீரமுத மாகிஎல்லாந் தித்திப்ப தன்போர்
        சிறிதுமிலாக் கடைப்புலையேன் திறத்துக்கிங் கென்றால்
    ஊரமுதப் பேரன்பர் பேசுமிடத் தவர்பால்
        உற்றவண்ணம் இற்றிதென்ன உன்னமுடி யாதே.

உரை:

     பெறற்கரிய அமுதம் போன்றவளும், எனக்கு அன்னையும் அபிராமியுமாகிய ஆனந்தவல்லி என்னும் உமாதேவியுடன் தில்லையம்பலத்தின்கண் விளங்கும் பெரிய அமுதமயமான உனது திருவுருவைக் குறித்துப் பேசுகின்ற போது அன்பு சிறிதும் இன்றிக் கடைப்பட்ட கீழ் மகனாகிய எனக்கு, சிவமணம் கமழ்வதே யன்றிச் சிறந்த தேவாமுதமாய் யாவும் இனிக்கின்றன வென்றால், ஊரின் கண் வாழும் பெரிய அமுது போன்ற மெய்யன்பர்கட்கு உளதாகிய இன்பம் இத்தன்மையது என்று நினைக்க முடியாதன்றோ? எ.று.

     கடைந்த வழிப் பெறற்குரிய கடலமுதம் போலாத அருமை தோன்ற, “ஆரமுதம் அனையாள்” என வுரைக்கின்றார். அபிராமி - அழகி. இன்பக் கொடி போல்பவளை “ஆனந்தவல்லி” என்பர். மணம் என்றது ஈண்டு சிவமணம் குறித்தது. கருவி கரணங்கள் யாவும் என்றற்கு “யாவும்” என்று கூறுகிறார். கடையவனாகிய புலையன்; கடைப் புலையன் என வந்தது. செவிக்குச் சுவை நல்கும் இனிய பெயர்களைப் பூண்டு எங்கும் பரந்து வாழும் மெய்யன்பர் கூட்டத்தை “ஊரமுதப் பேரன்பர்” என்று இசைக்கின்றார். இற்று. இத்தன்மைத்து.

     இதனால், ஊர்தொறும் வாழும் மெய்யன்பர் பெற்ற சிவானுபவம் கூறியவாறாம்.

     (8)