3198. பொற்பதத்தாள் என்னளவிற் பொன்னாசை தவிர்த்தாள்
பூரணிஆ னந்தசிவ போகவல்லி யோடு
சொற்பதமுங் கடந்தமன்றில் விளங்கியநின் வடிவைத்
தூய்மையிலேன் நான்எண்ணிந் தோறும்மனம் இளகிச்
சிற்பதத்திற் பரஞான மயமாகும் என்றால்
தெளிவுடையார் காண்கின்ற திறத்தில்அவர்க் கிருக்கும்
நற்பதம்எத் தன்மையைதோ உரைப்பரிது மிகவும்
நாதமுடி தனிற்புரியும் ஞானநடத் தரசே.
உரை: நாத தத்துவத்தின் உச்சியில் நின்று செய்கின்ற ஞானத் திருக்கூத்தையுடைய அருளரசே, அழகிய திருவடியை யுடையவளும், என் அளவில் பொன்னாசையைப் போக்கினவளும், குறைவிலா நிறைவானவளும் ஆகிய ஆனந்தம் நல்கும் சிவபோக வல்லியாகிய உமாதேவியோடு சொல்லுதற் கரிய எல்லையைக் கடந்த தில்லையம்பலத்தின்கண் விளங்குகின்ற நின் திருவுருவைத் தூய்மை யில்லாத யான் நினைக்கும் தோறும் என் நெஞ்சமே யுருகி உலகியல் ஞான வகை பலவற்றிற்கும் மேலாய பரஞான மயமாகிற் தென்றால், தெளிந்த சிந்தையுடன் காண்கின்ற சிவஞானிகளிடத்தில் அவர்க்குண்டாகும் இன்ப நன்னிலை எத்தகைய தாகுமோ; எம்மனோரால் மிகவும் உரைக்க முடியாதது. எ.று
பொற்பதம் என்றவிடத்துப் பொன் அழகின் மேற்று. மண் பெண் என்ற ஆசை யிரண்டினும் பொன்னாசை மிக்கதாகலின், அதனை விதந்து ஓதுகிறார். சிவபோக வல்லி, சிவத்துக்குப் போகம் நல்குபவள். இது சிவயோகத்தால் பெறலாவது. சொற் பதம் - சொல்லெல்லை. சிற்பதம் - ஞான நிலை; உலகியல் அறிவு நிலையுமாம். சிவ பரம்பொருளை அல்லது பிறவற்றை நினையாத தன்மையதாவது சிவஞான மயம் என்று சொல்கிறார். தெளிவுடையார் - தெளிந்த மெய்ஞ்ஞானிகள். சிவ சொரூப தரிசனத்தின்கண் மெய்ஞ்ஞானிகளின் உள்ளத்தில் நிறையும் இன்ப நிலை நற்பதம் எனப்படுகிறது.
இதனால், மெய்ஞ்ஞானிகள் பெறும் சிவானுபவம் தெரிவித்தவாறாம். (9)
|