3199. என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள்
இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே
இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம்
இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன்
அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி
அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி
என்புருக மனஞான மயமாகும் என்றால்
எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே.
உரை: என்னுடைய பிழைகள் யாவையும் பொறுத் தருளியவளும், என்னை முன்னே ஆதரித் தருளியவளுமான இறைவியாகிய சிவகாமவல்லி யெனப்படும் என் தாயுடன் இன்ப வடிவாய் தில்லையம்பலத்தின்கண் விளங்குகின்ற திருக்காட்சி இத்தன்மையது என யான் நினைக்கும் போது எத்தன்மையது எனச் சொல்லுவேன்; அன்புருவாய், அதுவதுவாய், அளிந்த பழமாய், அப்பழத்தின் சாறாய், அதன் அரிய சுவையாய், என்பெலாம் உருக நிலவும் மனம் ஞான மயமாகிற தென்றால், மெய்யன்புடைய சான்றோர் உள்ளம் கலந்து காணுமிடத்து எத்தன்மையதாம். எ.று.
பிழை பொறுத்தலும் அன்பால் ஆதரித்தலும் தாய்மையின் செயலாதலின், உமாதேவியை “என் பிழை யாவும் பொறுத்தாள், என்னை முன்னே ஆதரித்தாள்” என மொழிகின்றார். கேவலத்திற் கிடந்த போது அருள் கூர்ந்து உடல், கருவி முதலியவற்றை அளித்து உலகில் பிறப்பித்தமை புலப்பட, “முன்னே அளித்தாள்” என வுரைக்கின்றார் என்பதும் ஒன்று தில்லையம்பலத்தில் காட்சி தந்த சிவக்கோலம் இன்ப வடிவினது என்றற்கு”இன்ப வடிவாய் பொதுவில் இலங்கிய நின் வண்ணம்” என்று கூறுகின்றார். அளிந்த பழம் - முற்றக் கனிந்த பழம். புறத்தே எலும்பும் அகத்தே மனமும் இருப்பது பற்றி, “மனம் என்புருக” என்று உரைக்கின்றார். நினைக்கின்ற என் மனமே நின் திருவருட்காட்சியால் ஞான மயமாகுமெனின் மெய்யன்புடைய ஞானிகளின் மனம் என்னாகு மென்று வியப்பது தோன்ற, “மெய்யன்புடையார் இயைந்து கண்ட இடத்தே எற்றோ” என இயம்புகின்றார்.
இதனால், மெய்யன்புடையார் பெற்ற சிவானுபவம் விளம்பியவாறாம். (10)
|