3200. கரும்பனையாள் என்னிரண்டு கண்களிலே இருந்தாள்
கற்பகப்பொன் வல்லிசிவ காமவல்லி யுடனே
விரும்புமணிப் பொதுவினிலே விளங்கியநின் வடிவை
வினையுடையேன் நினைக்கின்ற வேளையில்என் புகல்வேன்
இரும்பனைய மனம்நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஒருபேர்
இன்பமய மாகும்எனில் அன்பர்கண்ட காலம்
அரும்பிமலர்ந் திட்டசிவா னந்தஅனு பவத்தை
யாரறிவார் நீஅறிவாய் அம்பலத்தெம் அரசே.
உரை: அம்பலத்தின்கண் ஆடுகின்ற அருளரசே, கரும்பு போன்ற இனிய பண்பை யுடையவளும், எனது இரண்டு கண்களிலே இருப்பவளும், கற்பக நாட்டுப் பொற்கொடி போன்ற சிவகாமவல்லியாகிய உமாதேவியுடன் கண்டார் விரும்புகின்ற மணிகள் இழைத்த பொன்னம்பலத்திலே விளங்கித் தோன்றுகின்ற நின்னுடைய திருவடியை வினைப்பிணிப்பையுடைய யான் நினைக்கின்ற போது என்ன சொல்வேன்? இரும்பு போன்ற என் மனம் மிகவும் நெகிழ்ந்து நீராய் உருகி ஒப்பற்ற பெரிய இன்ப மயமாய் ஆகிறதென்றாலும், மாணிக்கவாசகர் முதலிய அன்பர்கள் கண்ட காலத்தில் அவர்களிடத்துத் தோன்றி விரிந்த சிவானந்த அனுபூதியை யாவரால் அறிய முடியும்; நீதான் நன்கு அறிவாய். எ.று.
அம்பலத்தில் ஆடுபவனாயினும் உயிர்த் தொகைகட்கு அருளரசு பரிபவனாதலால் சிவபெருமானை, “அம்பலத்து எம்மரசே” எனப் போற்றுகின்றார். கரும்பு போன்று இனிய அருட் பண்பு உடையவளாதலின், “கரும்பனையாள்” என்றும், கண்ணிடமாக இருந்து நிலம் கண்டு மகிழச் செய்கின்றாளாதலின், “என்னிரண்டு கண்களிலே இருந்தாள்” என்றும் உரைக்கின்றார். பொன்வல்லி - பொற் கொடி.. கற்பக நாட்டுக் கற்பக மரத்தில் பின்னிக் கிடக்கும் பொற் கொடி போல்பவள் என்ற கருத்துத் தோன்ற, “கற்பகப் பொன்வல்லி” என்று இயம்புகின்றார். தில்லையம்பலத்தின் பொற்பு எத்திறத்தவரும் விரும்பத்தக்க நிலையில் இருப்பதால் “விரும்பு மணிப் பொது” என்று வியந்து கூறுகின்றார். மனதால் நினைத்தலும், வாயால் சொல்லுதலும், மெய்யால் செய்தலும் ஆகிய எல்லாவற்றாலும் வினைகளையே செய்து அவற்றால் பிணிப்புண்டு இருத்தலால், “வினையுடையேன்” என்று வடலூர் வள்ளல் தம்மையே குறித்துப் பேசுகிறார். தில்லைக் கூத்தப் பெருமானைக் கண்டபோது இரும்பு போல் வலிதாய் இருந்த நெஞ்சம் அன்பால் நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி இன்பமுற்று இன்பமயமே ஆயிற்று என்பாராய், ”இரும்பனைய மனம் நெகிழ்ந்து நெகிழ்ந்துருகி ஓர் பேரின்ப மயமாகும்” என இசைக்கின்றார். உருகாமல் வலிதாக இருந்த நெஞ்சம் மென்மையுற்று உருகினமை காணப் பிறந்த வியப்பைப் புலப்படுத்தற்கு “என் புகல்வேன்” என இயம்புகிறார். அன்பர் என்றது மாணிக்கவாசகர் முதலிய முன்னோர்களை, மணிவாசகர் முதலிய பெருமக்கள் கண்டு களித்தபோது அவர்கள் உள்ளத்தில் எழுந்து மலர்ந்த சிவானந்தத்தை, சிவனையன்றிப் பிறரறிய மாட்டாமை யுணர்த்துதற்கு” அரும்பி மலரந்திட்ட சிவானந்த அனுபவத்தை யாரறிவார்; நீ அறிவாய்” என வுரைக்கின்றார்.
இதனால், சிவானந்தம் அன்பர் உள்ளத்தில் அரும்பிப் பெருகும் திறம்
கூறியவாறாம். (11)
|