3201.

    காமசத்தி யுடன்களிக்குங் காலையிலே அடியேன்
        கனஞான சத்தியையுங் கலந்துகொளப் புரிந்தாள்
    வாமசத்தி சிவகாம வல்லியொடும் பொதுவில்
        வயங்கியநின் திருவடியை மனங்கொளும்போ தெல்லாம்
    ஆமசத்தன் எனும்எனக்கே ஆனந்த வெள்ளம்
        அதுததும்பிப் பொங்கிவழிந் தாடும்எனில் அந்தோ
    ஏமசத்தர் எனும்அறிஞர் கண்டவிடத் திருந்த
        இன்பஅனு பவப்பெருமை யாவர்புகல் வாரே.

உரை:

     இச்சா சத்தி மேலிட்டு இருக்குங் காலத்திலும் அடியேனுடைய பெருமைக்குரிய ஞான சத்தியையும் எழுப்பிக் கலந்து நிலவ அருளுபவளும், சிவத்தின் இடப்பாக சத்தியுமாகிய சிவகாமவல்லியென்னும் உமாதேவியுடன் தில்லையம்பலத்தில் விளங்குகின்ற உன்னுடைய திருவடியை மனத்தில் நினைக்கும் போதெல்லாம் போதிய வன்மை யில்லாதவனாகிய எனக்கு இன்பம், வெள்ளம் போல் பெருகித் ததும்பி என்னுள் பொங்கி வழிந்தோடும் என்றால், ஏமசத்தர் என்னும் பேரறிஞர் கண்டு களித்திருந்த போது அவர் பெற்ற இன்ப வனுபவத்தின் பெருமையை யாரே எடுத்துரைப்பார். எ.று.

     சத்தாகிய உயிர்க்கும், இச்சை அறிவு தொழில் என மூவகை சத்திகள் உண்டெனினும் அவை மூன்றும் முக்குணங்கள் போல இடம் காலங்கட்கு ஏற்ப மிக்கும் குறைந்தும் இயங்குவனவாம். இச்சையாகிய சக்தி மேல் எழும்போது அறிவுச் சத்தியும் உடன் கலந்த வழி, நல்லவற்றின் நலங்கண்டு பேணும் நயப்பாடு திருவருளால் உயிர்கட்கு உண்டாகும். அத்திருவருள் வடிவாய்ச் சிவசத்தி இயக்குகிறது என்னும் சைவநூல் கொள்கை விளங்க “காமசத்தியுடன் களிக்குங் காலையிலே அடியேன் கனஞான சத்தியையும் கலந்து கொளப் புரிந்தாள்” என உரைக்கின்றார். இச்சையை விட ஞானம் சிறப்புடையதாதலின், “கன ஞானசத்தி” எனச் சிறப்பிக்கின்றார். சிவன் திருமேனியின் இடப்பாகத்து ஒருகூறாய் ஒன்றியிருத்தலின், உமாதேவியை “வாம சத்தி” என்று கூறுகின்றார். சிவகாமவல்லி என்று உமாதேவிக்கு ஒரு பெயர் தில்லைப் பெருமானுடைய திருவுருவை மனத்தில் நினைக்கும்போது உள்ளத்தில் எழும் சிவானுபவத்தை மனம் கொள்ளும் போதெல்லாம் எனக்கே ஆனந்த வெள்ளமுது ததும்பிப் பொங்கி வழிந்தோடும் என்று கூறுகின்றார். “ஆமசத்தன்” என்பதை அசத்தனாம் என மாறுக. போதிய மனவன்மை யில்லாதவன் அசத்தன் எனப்படுவான். தமக்கேயன்றிப் பிறர்க்கும், பிற உயிர்கட்கும் உரிய உதவிக் காப்பளிப்பவர்களை “ஏமசத்தர்” என்பர். ஏமமாகும் சத்தியையுடையவர் ஏமசத்தர். ஏமம் - பாதுகாப்பு உண்மை யறிவு ஆற்றல் உடைய நன்மக்கள் இத்தகைய ஏமசத்தராக விளங்குதலால், அவர்களை “ஏமசத்தர் எனும் அறிஞர்” என வுரைக்கின்றார். அவர்கள் பலரையும் திருத்தொண்டர் தொகை விரியுள் பரக்கக் காணலாம். அம்பெரு மக்கள் கண்ட சிவானுபவத்தை விளக்கலுற்ற வள்ளற் பெருமான் “ஏமசத்தர் எனும் அறிஞர் கண்டவிடத் திருந்த இன்ப வனுபவப் பெருமை யாவர் புகல்வாரே” என்று கூறுகின்றார்.

     இதனால் ஏமசத்தராகிய சைவ மெய்த்தொண்டர் பெற்ற சிவானுபவத்தைச் சிறப்பித்து உரைத்தவாறாம்.

     (12)