7. அதிசய மாலை

    அஃதாவது, திருவருள் ஞானம் எய்தியது பற்றி இறைவனை வியந்து பாராட்டுகின்ற சொல் மாலை என்பதாம். இதன்கண், சிவபெருமான் திருவருள் ஞானம் வழங்கியதை நினைந்து இன்புற்று வியப்பு மேலிட்டு, பெருமானுடைய திருவருள் தமக்கு எய்தியது மிக்க அதிசயத்தைத் தருகிறது எனப் பாட்டுத் தோறும் எடுத்துரைக்கின்றார். திருவருளை, சோதி வண்ணப் பொருள் என்றும், சித்தி என்றும் பாராட்டுகின்றார். இத் திருவருளை வேண்டி மெய்யுணர்ந்தோர், ஐந்தவித்தோர், தாபதர், மெய்யன்பர். யோகியர், தவ யோகியர், சமாதி யோகியர், பாடும் தொண்டர் ஆகியோருடைய திருவருள் முயற்சிகளும், திருவருள் நலங்களும் இடையிடையே குறிக்கப்படுகின்றன.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3202.

    அக்கோஈ ததிசயம்ஈ தசிசயம்என் புகல்வேன்
        அயன்முதலோர் நெடுங்காலம் மயன்முதல்நீத் திருந்து
    மிக்கோல மிடவும் அவர்க் கருளாமல் இருளால்
        மிகமருண்டு மதியிலியாய் வினைவிரிய விரித்து
    இக்கோலத் துடனிருந்தேன் அன்பறியேன் சிறியேன்
        எனைக்கருதி என்னிடத்தே எழுந்தருளி எனையும்
    தக்கோன்என் றுலகிசைப்பத் தன்வணம்ஒன் றளித்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     தனிச் சிறப்புடைய சிவகாமவல்லியாகிய உமாதேவி இன்புறும் திருக்கூத்தை யாடும் சிவபெருமான், பிரமன் முதலிய தேவதேவர்கள் மயக்கம் முதலிய குற்றங்களைப் போக்கி நெடுங்காலம் தவமிருந்து ஓலமிட்டழைப்பவும், அவர்கட்கு விரைந்து அருள் புரியாமல் அறியாமையால் மனமருண்டு இயற்கையறிவுமின்றி வினைகளை மிகுவித்துப் பெருக்கி இப்போதுள்ள நிலையிலே இருந்தேனாக, அன்பின் நயமறியாமல் சிறுமையுற்ற என்னையொரு பொருளாகக் கொண்டு என்பால் வந்து, இவ்வுலகத்தவர் மதிக்கத் தக்கவன் என்று பாராட்டத் தனக்குரிய நலமொன்றை அருளினான்; இஃதோர் பேரதிசயம் காண். எ.று.

     அக்கோ, வியப்பு மிகுதி குறிக்கும் இடைச் சொற் குறிப்பு. என் புகல்வேன் - இதுவும் அதிசயம் புலப்படுத்தும் பொருளது. அயன் முதலோர் - பிரமன் திருமால் உருத்திரனாகிய தேவதேவர்கள். காம வெகுளிகளின் அடியாகப் பிறக்கும் குற்றங்களின்பால் விளையும் மயக்கம். இது செயற்கையாதலின், “நீத்திருந்து” என்று கூறுகிறார். அருளிப் பாடும் செயப்படுவார் சால்பு நோக்கியதாகலின், ஓலமிடவும் அருளாமல்” என வுரைக்கின்றார். இருள் என்றது மலவிருளை; மனத் தொடர்பைச் சகச மலம் என்பர். “சகசமலத் துணராது” (சிவ. ஞா. போ.) என மெய்கண்டார் விளம்புவது காண்க. மலவிருளால் மறைப்புண்டலின், “மிக மருண்டு” என்றும், அதனால் அறிவொளி மழுங்குதல் பற்றி, “மிக மருண்டு மதியிலியாய்” என்றும், அதுவே வாயிலாக வினைகள் பெருகுவது கண்டு, “வினை விரிய விரித்து” என்றும் இயம்புகின்றார். அறிவு, மனம், மொழி, மெய் என்ற நான்காலும் வினைகள் தோன்றுதலால், “வினை விரிய விரித்து” எனக் கூறுகின்றார். கோலம் - படிவம். வினை செய்தற் கேற்ப அமையும் தோற்றம் என்றுமாம். இந்நிலையில் தம்முடைய உண்மைத் தன்மையை நோக்கி நிரம்பிய அன்பும் அறிவும் இல்லாமை யோர்ந்து “அன்பறியேன் சிறியேன்” என மொழிகின்றார். எனது இந்த எளிமை கண்டு இரக்கமுற்று என்பால் மக்களுருவில் தோன்றினான் என்பாராய், “என்னிடத்தே எழுந்தருளி” என்றும், எனக்குத் தன் நலமொன்றை நல்கி உலகத்தவர் திருவருள் நெறிக்குத் தக்கவன் எனப் பாராட்டுமாறு உயர்த்தி யுள்ளான் என்பாராய், எனையும் தக்கோனென்று உலகுரைப்பத் தன்வணம் ஒன்றளித்தான்” என்றும் தெரிவிக்கின்றார். நலம் - சிவக் கோலங்களி லொன்று.

     இதனால், தமக்குச் சிவஞான மருளிச் சிவக்கோலம் ஒன்றை நல்கியது உரைத்தவாறாம்.

     (1)