3204. அத்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அந்தணரெல் லாரும்மறை மந்தணமே புகன்று
ஒத்தோல மிடவும் அவர்க் கொருசிறிதும் அருளான்
ஓதியனையேன் விதியறியேன் ஒருங்கேன்வன் குரங்கேன்
இத்தோட மிகவுடையேன் கடைநாய்க்குங் கடையேன்
எனைக்கருதி யானிருக்கும் இடந்தேடி நடந்து
சத்தோட முறஎனக்கும் சித்தியொன்று கொடுத்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லி கண்டு மகிழ்ச்சி கொள்ள இனிய நடம் புரியும் பெருமான், அந்தணர்கள் எல்லாரும் வேதங்கள் உரைக்கும் மந்திரங்களை விரும்பி யோதி ஒருசேரக் கூடி ஓலமிட்டலறவும், அவர்களுக்கு ஒருசிறிது மருள் செய்யாமல் ஒதி மரம் போன்றவனும் விதி முறைகளை அறியாதவனும், மனம் ஒடுங்காதவனும், வலிய குரங்கு போன்றவனும், இன்னோரன்ன குற்றங்களை மிகவுடையவனும், கடைப்பட்ட நாயினும் கீழானவனும் ஆவேன் என நினைத்து யான் ஒடுங்கியிருக்க, யான் இருக்குமிடத்தைத் தேடி என்பால் நடந்து வந்து, மகிழ்ச்சி யுண்டாகுமாறு எனக்கும் சித்தியொன்று கொடுத் தருளினான்; இந்த அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன். எ.று.
அந்தோ என்பது அத்தோ என வந்தது. இரக்கக் குறிப்பினதாகிய இது வியப்பின்கண் வந்தது. மந்தணம் மந்திரம் - வேதங்களில் பாட்டுருவில் இருப்பவை மந்திரம் எனப்படுதலின், இங்கே அவை மந்தணம் என்று கூறப்படுகின்றன. தனித் தனியாக வின்றி ஓதுவோர் பலரும் ஒருங்கு நின்று ஓலமிடுதலால், “ஒத்தோலமிட” என வுரைக்கின்றார் ஒதி - அகத்தே காழ்ப்பில்லாத (வலி) ஒருவகை மரம். அறநூல் கூறும் ஒழுக்க விதிகளை யறியாதவன் என்பார். “விதியறியேன்” என்றும் மனத்தை ஒருநெறிப்படுத்தும் மதுகையில்லாதவன் என்பதுதோன்ற, “ஒருங்கேன்” என்றும், மனத்தைப் பொறி வழிச் சென்றலைய விடுபவன் என்பது புலப்பட, “வன்குரங்கேன்” என்றும் கூறுகின்றார். வன்குரங்கன் - வலிய குரங்கு போல்பவன். இக் கூறிய குற்றங்கள் தம்பால் மிக்கு இருப்பது பற்றி மனம் வருந்தி “இத்தோட மிகவுடையேன், கடை நாய்க்கும் கடையேன்” எனத் தம்மைத் தாமே இழித்துரைக்கின்றார். தோஷம் - தோடம் என வந்தது. நாய்வகைகளில் கடைப்பட்ட நாயினும், கடையவன் என்பதைக் “கடைநாய்க்கும் கடையேன்” என்று கூறுகின்றார். குற்றம் மிகவுடைமை காணுமிடத்துக் குற்றமுடையார்க்கு நடுக்கும் தானே உளதாகலின் அது விளங்கிப் புலப்பட, “எனைக் கருதி யானிருக்கும் இடம்” என்று இசைக்கின்றார். சந்தோடம் - சத்தோடம் என வந்தது. நினைத்தது கைவரப் பெற உதவுவது சித்தி யெனப்படும்.
இதனால், மறை யோதும் வேதியர்க் கெய்தாத - சித்தி தனக்கு எய்தியது
தெரிவித்தவாறாம். (3)
|