3205.

    அந்தோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
        அறிவுடையார் ஐம்புலனும் செறிவுடையார் ஆகி
    வந்தோல மிடவும் அவர்க் கருளாமல் மருளால்
        மனஞ்சென்ற வழியெல்லாந் தினஞ்சென்ற மதியேன்
    எந்தோஎன் றுலகியம்ப விழிவழியே உழல்வேன்
        எனைக்கருதி எளியேன்நான் இருக்குமிடத் தடைந்து
    சந்தோட முறஎனக்கும் தன்வணம்ஒன் றளித்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவியின் மனம், இனிக்கும்படி அம்பலத்தின்கண் ஆடுகின்ற பெருமான், மெய்யறிவுடையவர்களும் புலனைந்தும் அடங்கிய மேலோர்களும் தன் திருமுன் வந்து ஓலமிட்டு நிற்க அவர்க்கருளாமல் மலர்ப்பிணிப்பால் மருட்சி கொண்டு மனம் போன வழியே நாளும் சென்று திரிகின்ற மதியில்லாதவனாகிய என்னை, “இவன் யாவனோ” என்று உலகம் இகழ்ந்து பேசப் பார்த்த இடமெல்லாம் அலைபவனாகிய என்னைப் பொருளாகக் கருதி, எளியவனாகிய யான் இருக்கு மிடத்திற்கு வந்தருளி, யான் உவக்குமாறு எனக்கும் அருளொளி ஒன்று கொடுத்தருளினான்; இந்த அதிசயத்தை என்னென்று சொல்வேன். எ.று.

     மெய்யுணர்வுடைய பெருமக்களைச் சிறப்புக் குறித்து, “அறிவுடையார்” என்றும், ஐந்தவித்தடங்கிய பெருமக்களை “ஐம்புலனும் செறிவுடையார்” என்றும் புகழ்கின்றார். அவர்கள் வந்த மாத்திரையே தங்குதடையின்றி அருளுபவனாகிய பெருமான், உடன் அருளாமல் தாழ்த்தது பற்றி, “வந்து ஓலமிடவும் அவர்க்கு அருளாமல்” என வியந்து கூறுகின்றார். மல மாயைகளால் உயிர்த்தொகைகள் மருட்சி மலிதல் பற்றி, “மருளால்” என்று குறிக்கின்றார். நல்லறிவுடையவர் மனம் போகின்ற வழியில் போக விடாது நிறுத்தும் சான்றோராதலின், அவர்க்கு மாறாகிய தன்மை தன்பால் உளது என்றற்கு “மனம் சென்ற வழியெல்லாம் தினம் சென்ற மதியேன்” என வுரைக்கின்றார். எந்து - யாவது. அது எந்துவே என்றருளாயே” (அருட்) என மணிவாசகர் வழங்குவது காண்க. எதுவென்பது எந்து என வந்தது எனினும் அமையும். கண்டவிடத்தெல்லாம் காணப்படுமாறு அலையும் செயலை “விழி வழியே உழல்வேன்” என வுரைக்கின்றார். தன்வணம் - தனது அருட்பண்பு.

     இதனால், மெய்யுணர்வு உடையார்க்கும், ஐந்தவித்தார்க்கும் எய்தாத திருவருள் தமக்கெய்தியது தெரிவித்தவாறாம்.

     (4)