3207. அம்மாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அன்பரெலாம் முயன்றுமுயன் றின்படைவான் வருந்தி
எம்மானென் றேத்திடவும் அவர்க்கருளான் மருளால்
இதுநன்மை இதுதீமை என்றுநினை யாமே
மைம்மாலிற் களிசிறந்து வல்வினையே புரியும்
வஞ்சகனேன் தனைக்கருதி வந்துமகிழ்ந் தெனக்கும்
தம்மான முறவியந்து சம்மான மளித்தான்.
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி மனம் மகிழுமாறு நடம் செய்யும் பெருமான், அன்பராயினார் எல்லாரும் பேரின்பம் அடையும் பொருட்டு மிகப் பெரிதும் முயன்று மனம் வருந்தி எங்கள் பெருமானே என்று போற்றி நிற்கவும், அவர்க்கு உடனருளாமல் மல மருட்சியால் இது நல்லது, இது தீயது என்று நினைத்தலின்றி உலகியல் மயக்கத்தில் மிகவும் களிப்புற்று வலிய வினைகளையே செய்யும் வஞ்சகனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி என்பால் மகிழ்வோடு வந்து எனக்கும் தன்மானம் மிகுமாறு பாராட்டித் திருவருள் ஞானமாகிய சன்மானத்தை வழங்கி அருளினார்; இந்த மிக்க அதிசயத்தை என்னவென்று சொல்வேன். எ.று.
அம்மா - வியப்பிடைச் சொல், சிவத்தின் பெருநலங்களை அறிந்து அன்பு செய்கின்றவர்களை “அன்பர்” என்பர். அன்பு நெறியால் பெறுவது பேரின்பம் என்பதை உணர்ந்து அதனைப் பெறும் பொருட்டுப் பலகாலும் முயலுகின்ற பெருமக்கள், பெறச் சமைந்திருக்கின்ற அவர்கள் நின்று ஏத்துகின்றனர் என்பார். “அன்பரெலாம் முயன்று முயன்று இன்படைவான் வருந்தி எம்மான் என்று ஏத்திடவும்” என உரைக்கின்றார். இன்பு - பேரின்பம். மருள் - மலமாகிய பிணிப்பால் உண்டாகும் மருட்சி. பொருளல்லவற்றைப் பொருளாகக் காணச் செய்வது அதன் இயல்பாதலின், “மருளால் இது நன்மை யிது தீமை என்று நினையாமே” என்று கூறுகின்றார். மைம்மால் - உலகியல் மயக்கம். எளிதில் நீங்காமை பற்றி அதனை மைம்மால் என்று சொல்லுகிறார். அந்த உலகியல் மயக்கத்தால் விடாது பற்றும் வன்மைத்தாகிய வினையையே செய்வது பற்றி, “வல்வினையே புரியும் வஞ்சகனேன்” என உரைக்கின்றார். தன்மானம் தம்மானம் என்றும், சன்மானம் சம்மானம் என்றும் திரிந்தன.
இதனால் அன்பராயினார் பெறாத திருவருளைத் தாம் பெற்றது வியந்து
உரைத்தவாறாம். (6)
|