3208. ஆவாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அடியரெலாம் நினைந்துநினைந் தவிழ்ந்தகநெக் குருகி
ஓவாமல் அரற்றிடவும் அவர்க்கருளான் மாயை
உலகவிட யானந்தம் உவந்துவந்து முயன்று
தீவாய நரகினிடை விழக்கடவேன் எனைத்தான்
சிவாயநம எனப்புகலும் தெளிவுடையன் ஆக்கிச்
சாவாத வரங்கொடுத்துத் தனக்கடிமை பணித்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லி யென்னும் உமாதேவி கண்டு மனம் இனிக்கும்படி அம்பலத்தில் ஆடல் புரிகின்ற பெருமான், அடியனாயினார் எல்லாரும் திருவடியை நினைந்து நினைந்து அறிவு மலர்ந்து மனம் குழைந்து உருகி, இடையறாமல் போற்றித் துதிக்கவும், அவர்க்கு உடன் அருளாமல் மாயா காரியமாகிய உலகப் பொருள்கள் தரும் இன்பத்தை மிகவும் விரும்பி அவற்றையே பெற முயன்று அதன் வாயிலாகத் தீயெரியும் நரகத்தில் விழச் சமைந்தவனாகிய என்னை, சிவாயநம என்று சொல்லும் தெளிந்த அறிவுடையவனாக்கிச் சாவா வரம் கொடுத்துத் தனக்கே என்னை அடிமை யாகுமாறு செய்தான்; ஆகா! இந்த அதிசயத்தை என்னென்று சொல்வேன். எ.று.
இறைவன் திருவடியின் பெருமையை யுணர்ந்து அதனை அடைதற்கு விரும்பி முயல்கின்ற பெருமக்களை “அடியர்” என்று புகழ்கின்றார். அவர்கள் திருவடிப் பேறு குறித்துச் செய்கின்ற முயற்சியும் துதிக்கின்ற திறத்தையும் எடுத்துரைப்பாராய், நினைந்து நினைந்து அவிழ்ந்தக நெக்குருகி ஓவாமல் அரற்றிடவும்” என்று மொழிகின்றார். உலகியல் இன்பத்தை வெறுத்தபோது கூம்பிய உள்ளம் திருவடிப்பேற்றின்கண் செல்லும்போது முறுக்கவிழும் மலர் போல நெகிழ்ந்து விரிதலின், “அகம் அவிழ்ந்து நெக்குருகி” என விளம்புகிறார். இடையறாது துதிப்பது தோன்ற “ஓவாமல் அரற்றிட” என வுரைக்கின்றார். மாயையாகிய முதற் காரணத்திலிருந்து தோன்றியதாகலின், உலக போகத்தை “மாயை உலகவிட யானந்தம்” என்று கூறுகின்றார். உலகவிடயம் நல்கும் இன்பம் முடிவில் எரிவாய் நரகத்திற்கு ஆளாக்குதலின், “உவந்து வந்து முயன்று தீவாய நரகினிடை விழக் கடவேன்” என்று தெரிவிக்கின்றார். தனது திருவருள் ஞானத்தைப் பெறுதற் குரியனாக்கிய திறத்தை “சிவாயநம எனப் புகலும் தெளிவுடையன் ஆக்கி” எனக் கூறுகின்றார். சிவாயநம என்பது சிவநெறி கூறும் திருவைந் தெழுத்தாகும். அதனைப் புகலும் நெறி, ஓதும் முறை - நிற்கும் முறை என இரு வகைத்தாதலால், ஓதும் முறையறிந்து ஓதுதற்குத் தெளிந்த அறிவு வேண்டுதலின், தெளிவுடையன் ஆக்கி” எனச் செப்புகின்றார். உலகில் பிறந்திறந் துழலும் நிலையைப் போக்கி இனிப் பிறவா நிலையை அருளினான் என்பாராய், “சாவாத வரம் கொடுத்து” என்றும், சாவாநிலை எய்தினோர் சிவபிரான் திருவடிக் கீழ் எப்பொழுதும் இருப்பரென்றற்கு, “தனக்கு அடிமை பணித்தான்” என்றும் சாற்றுகின்றார்.
இதனால் சாவா வரம் கொடுத்து அடிமைப் படுத்திய திறம் தெரிவித்தவாறாம். (7)
|