3209.

    அண்ணாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
        அறங்கரைந்த நாவினர்கள் அகங்கரைத்து கரைந்து
    கண்ணார நீர்பெருக்கி வருந்தவும்அங் கருளான்
        கடைநாயிற் கடையேன்மெய்க் கதியைஒரு சிறிதும்
    எண்ணாத கொடும்பாவிப் புலைமனத்துச் சிறியேன்
        எனைக்கருதி வலியவும்நான் இருக்குமிடத் தடைந்து
    தண்ணார்வெண் மதியமுதம் உணவொன்று கொடுத்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாம வல்லியாகிய உமாதேவி கண்டு உள்ளம் இனிக்கும்படிக் கூத்தாடுதலையுடைய சிவபெருமான் செய்த இந்தப் பேரதிசயத்தை என்னென்று சொல்வேன்; அறநூல்களை வோதிய பெரு மக்களின் மனம் மிகவும் நீராய்க் கரைந்து கண்களில் நீர்ப் பெருகச் சொரிந்து புலம்பி நிற்கவும், உடன் அருளாமல், நாயினும் கடைப்பட்டவனும் மெய்ம்மையான சிவகதியைச் சிறிது போதும் நினைக்காத கொடும்பாவியும், புலை நினைவுகள் நிறைந்த மனத்தையுடைய சிறியவனுமாகிய என்னையும் பொருளாகக் கருதி நான் இருக்குமிடத்திற்குத் தானே வலிய வந்து, மதியமுதமாகிய உணவொன்றைக் கொடுத்தான். எ.று.

     அண்ணா, அம்மா போன்று வியப்புப் பொருளில் வந்தது. அறநூல்களை ஓதியுணர்ந்த பெருமக்களை “அறங் கரைந்த நாவினர்கள்” என்பது மரபு. “அறங்கரை நாவின் ஆன்றோர்” (24) என ஞானாமிர்தம் கூறுவது காண்க. அறநூல் உணர்ந்தோர் சிவனது திருவருளை வேண்டிக் குறையிரக்கும் திறத்தை விளக்கலுற்று “அகங் கரைந்து கரைந்து கண்ணால் நீர் பெருக்கி வருந்தவும்” எனவுரைக்கின்றார். நிலைபேறுடையதாகலின், சிவகதியை “மெய்க்கதி” என்று விளம்புகின்றார். புலை, கொலை, பொய் முதலியன பற்றிய நினைவே நிறைந்த மனத்தை, “புலை மனம்” என்று புகல்கின்றார். “தண்ணார் வெண்மதி” என்பது சமாதி யோகத்தின் துவாத சாந்தத்தில் தோன்றும் அமுத சந்திரன். அதனின்றும் ஒழுகும் அமுதத்தை உண்டு களிப்பது அவ்வோகியர் இயல்பு. அதனைத் தான் பெற்றமை கூறுவார். “தண்ணார் வெண்மதி அமுதம் உணவொன்று கொடுத்தான்” என உரைக்கின்றார்.

     இதனால், யோக முயற்சியுடைய யோகியர் உண்கின்ற மதியமுதம் பெற்றமை கூறியவாறாம்.

     (8)