3210.

    ஐயாஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
        அருமைஅறிந் தருள்விரும்பி உரிமைபல இயற்றிப்
    பொய்யாத நிலைநின்ற புண்ணியர்கள் இருக்கப்
        புலைமனத்துச் சிறியேன்ஓர் புல்லுநிகர் இல்லேன்
    செய்யாத சிறுதொழிலே செய்துழலுங் கடையேன்
        செருக்குடையேன் எனைத்தனது திருவுளத்தில் அடைத்தே
    சையாதி அந்தநடுக் காட்டிஒன்று கொடுத்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவிகண்டு உள்ளம் இனிக்கும்படிக் கூத்தாடுதலையுடைய சிவபெருமான் புரிந்த இந்த அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன்; உன் திருவருளின் அருமையறிந்து பெற விரும்பி அதற்குரிய செயல்கள் பலவும் செய்து மெய்ந்நிலைக்கண் நின்ற புண்ணியர்கள் ஒருபால் இருக்க, புலை நினைவு பொருந்திய மனத்தினால் சிறுமையுற்ற யான் ஒரு புல்லுக்கும் நிகரில்லாதவனாய்ச் செய்தற்காகாத சிறு செயல்களைச் செய்து திரியும் கடையனாய்ச் செருக்கு மிகுந்த என்னைத் தனது திருவுள்ளத்திற் கொண்டு ஒன்றின் ஒன்று தொடரும் ஆதியும் அந்தமும் நடுவும் எடுத்துக் காட்டித் திருவருளொன்று கொடுத்தருளினான். எ.று.

     ஐயா, வியப்புப் பொருளில் வந்தது. உலகோரை முன்னிலையாக்கியதுமாம். சிவ புண்ணியச்செல்வர்கள் அப் புண்ணிய பயனாக சிவத்தின் திருவருளை உணர்ந்து அதனைப் பெற விரும்பி முயலுகின்ற திறத்தை “அருமை அறிந்தருள் விரும்பி உரிமை பல இயற்றிப் பொய்யாத நிலை நின்ற புண்ணியர்கள்” என்று புகழ்கின்றார். வேறு வகையால் பெறலாகாதது திருவருள் என்பதை உணர்ந்து அதன் பேற்றுக்குரிய அறச் செயல்களைச் செய்தமை புலப்பட, “உரிமை பல இயற்றி” என்று இயம்புகின்றார். மெய்ம்மை நிலையைப் “பொய்யாத நிலை” என்று புகலுகின்றார். ஓரறிவு உயிராகிய புல்லுக்கும் ஒப்பாக மாட்டேன் என்றற்கு “ஒரு புல்லும் நிகரில்லேன்” என்று கூறுகின்றார். உயர்ந்தோர் விரும்பும் ஒள்ளிய செயல்களைச் செய்வதில்லை என்பதற்கு, “செய்யாத சிறு தொழிலே செய்துழலும் கடையேன்” என்று செப்புகின்றார். குற்ற வகைகளில் ஒன்றாகிய செருக்கும் தன்பால் உடைமை புலப்பட, “செருக்குடையேன்” என்று தெரிவிக்கின்றார். முதல், நடு என்பன ஒன்றினொன்று தொடர்ந்து இருப்பவனவாதலின், “சையாதி அந்த நடு” என்றும், அவற்றின் ஒருமைத் தன்மையைக் காட்டினமை தெரிவித்தற்கு, “காட்டி ஒன்று கொடுத்தான்” என்றும் இசைக்கின்றார். சையம் - தொடர்ச்சி.

     இதனால், ஆதி யந்த நடுக்களின் ஒருமைத் தன்மை காட்டியது உரைத்தவாறாம்.

     (9)