3211. அன்னோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி
என்னோஇங் கருளாமை என்றுகவன் றிருப்ப
யாதுமொரு நன்றியிலேன் தீதுநெறி நடப்பேன்
முன்னோபின் னும்அறியா மூடமனப் புலையேன்
முழுக்கொடியேன் எனைக்கருதி முன்னர்எழுந் தருளித்
தன்னோடும் இணைந்தவண்ணம் ஒன்றெனக்குக் கொடுத்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி கண்டு மனம் இனித்த நடம் புரிதலையுடைய சிவபெருமான், திருவருளின் பெரு நலத்தை யறிந்த பெரியோர்கள், அந்த அருளமுதம் வேண்டி ஏனோ இன்னும் எமக்கு அருளா திருக்கின்றாய் என்று மனம் வருந்தி யிருக்க, யாதொரு நற்பண்பும் இல்லாமல் தீநெறியிலே செல்பவனும், செய்யும் செயல்கட்கு அமைந்த காரண காரியங்களை எண்ணுதல் இல்லாத மூடத்தன்மை நிறைந்த மனத்தாற் புலைத்தன்மை பொருந்தியவனும், கொடுமை முற்றவும் உடையவனுமாகிய என்னை ஒரு பொருளாக மதித்து என் போந்தருளித் தன் தகுதிக்கு ஒத்ததாய திருவரு ளொன்றினைத் தந்தான்; ஐயோ, இந்த மிக்க அதிசயத்தை என்ன வென்று உரைப்பேன். எ.று.
அன்னோ - வியப்பை யுணர்த்தும் குறிப்பு மொழி. திருவருளின் அருமைகளையும் பெருமைகளையும நன்குணர்ந்த பெரியோர்கள் அதனைப் பெறுதற் பொருட்டு வருந்தி முயல்கின்றார்கள் என்பது தெரிவிப்பாராய், “அருளருமை அறிந்தவர்கள் அருளமுதம் விரும்பி” என்றும், அவ்வருளாகிய அமுதம் தமக்கு எய்தாமைக்கு வருந்தி, “எமக்குத் திருவருள் எய்தாமைக்குக் காரணம் என்னையோ” என ஏங்கித் தவிக்கின்றார்கள் என்பாராய், “என்னோ இங்கருளாமை என்று கவன்றிருப்ப” என்றும் எடுத்துரைக்கின்றார். அந்த நன்மக்களை நினைந்து கண்ட வடலூர் வள்ளல் தம்மை நோக்கித் தம்பாலுள்ள குற்றங்களையும் குறைகளையும் விரிய விளங்குவது கண்டு மனம் வெதும்பி, “ஏதும் ஒரு நன்றியிலேன் தீது நெறி நடப்பேன்” எனவும், நன்றோ தீதோ யாது செய்யினும் அதற்கு முன்னிற்கும் காரணத்தையாதல் பின் விளையும் காரியத்தையாதல் கண்டுணரும் அறிவில்லாதவன் என்றற்கு “முன்னோ பின்னோ அறியா மூட மனப் புலையேன்” எனவும், கொடுமைச் செயற் பண்பே தம்பால் நிறைந்து விளங்கினமையின் தம்மை “முழுக் கொடியேன்” எனவும் பாரித் துரைக்கின்றார். நன்றி - நன்னெறி; நன்மையுமாம். நற்செயல் நன்றெனப் பாராட்டுதலின், “நன்றி” எனப்படுகிறது. முன்பின் னோக்காது எதனையும் செய்தலாகாதாகலின், அதனை விதந்து “முன்னோ பின்னும் அறியேன்” என மொழிகின்றார். இந்த அறியாமைக்குக் காரணம் மனத்தின் மூடத் தன்மையும் பொய் முதலிய தீய நினைவுகளுமாதல் விளங்க, “மூட மனப் புலையேன்” எனக் கூறுகின்றார். அறிவில்லாதவனை முழுமகன் என்னும் வழக்குப்போல நன்றென்பது சிறிதுமின்றித் தீமையே யுருவாகியவன் என்றற்கு முழுக் கொடியேன்” என்கின்றார். அப்பெருமான் செய்த திருவருள் அவன் பெருமைக்கும் தகுதிக்கும் ஒத்த இயல்பினதென வுரைப்பாராய், “தன்னோடு இணைந்த வண்ணம் ஒன்று” என்று கூறுகின்றார்.
இதனால், தான் செய்யும் திருவருளைத் தன் தகுதிக்கு ஒத்த தன்மையிற் செய்தமை
தெரிவித்தவாறாம். (10)
|