3212. ஐயோஈ ததிசயம்ஈ ததிசயம்என் புகல்வேன்
அருவினைகள் அணுகாமல் அறநெறியே நடந்து
மெய்யோதும் அறிஞரெலாம் விரும்பியிருத் திடவும்
வெய்யவினைக் கடல்குளித்து விழற்கிறைத்துக் களித்துப்
பொய்ஓதிப் புலைபெருக்கி நிலைசுருக்கி உழலும்
புரைமனத்தேன் எனைக்கருதிப் புகுந்தருளிக் கருணைச்
சையோக முறஎனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி கண்டு திருவுள்ளம் இனிக்கக் கூத்தாடுதலை யுடைய சிவபெருமான், இந்த மிக்க அதிசயத்தை ஐயோ என்னென்று சொல்வேன்; விலக்குதற்கரிய தீவினைகள் தொடராதவாறு அறநெறிக் கண்ணே சென்று மெய்ம்மையே பேசி யொழுகும் அறிவுடையோர் யாவரும் பெற விரும்பி யேங்கி நிற்க, கொடிய வினைகளாகிய கடற்குள்ளே விழுந்து வீணுக் குழைத்துக் களிப்புற்றுப் பொய்களையே யுரைத்துப் புலைச் செயல்களை மிகவும் செய்து நிலைமையைச் சிறிதாக்கி வருந்தும் குற்றம் பொருந்திய மனத்தையுடையவனாகிய என்னை ஒரு பொருளாகக் கருதி என்பாற் போந்து தன் திருவருள் கலந்து கொள்ளத் தானே வலிய ஒன்று கொடுத்தருளினான். எ.று.
விலக்குதற் காகாமை பற்றி, தீவினை “அருவினை” எனப்படுகிறது. அறநெறியில் நின்று நல்வினைகளைச் செய்வதை, “அறநெறியே நடந்து” என்று கூறுகிறார். மெய் யோதுதல் - வாய்மையே மொழியும் நல்லறம். தம்மைச் செய்தாரை விடாமல் காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றிப் பெருகுதலால் “வெய்ய வினைக் கடல் குளித்து” எனவும், வினை செய்தலால் சிவப் பேற்றுக்குரிய காலம் வீணாதலை, “விழற் கிறைத்து” எனவும் இயம்புகின்றார். வீண்செயலை விழற் கிறைத்தல் என்பது வழக்கு. விழற் கிறைத்தவர் வருந்த வேண்டியவராக யான் மடமையால் மகிழ்ச்சி கொண்டேன் என்பார், “களித்து” எனவும், பொய் யுரைத்தும் களவு கொலை முதலியன பேசியும் எனது தகுதியைக் கெடுத்துக் கொண்டேன் என்றற்குப் “பொய் யோதிப் புலை பெருக்கி நிலை சுருக்கி யுழலும் புரை மனத்தேன்” எனவும் இயம்புகின்றார். இக் குற்றங்களால் உள்ளீடற்ற மனத்தை, “புரை மனம்” என்று புகல்கின்றார். பொருள்கள் ஒன்றோடொன்று கலத்தல் “பிரிக்கக் கூடிய கலப்பு” எனவும், “கூடாக் கலப்பு” எனவும் இரண்டாகி, பிரிக்கக் கூடாததைச் “சமவாயக் கலப்பு” என்றும் பிரிக்க கூடியதை “சையோகக் கலப்பு” என்றும் பெரியோர் கூறுதலின், திருவருளோடு தாம் பெற்ற கருணைக் கலப்பைக் “கருணைச் சையோகமுற எனக்கும் வலிந்தொன்று கொடுத்தான்” என்று உரைக்கின்றார்.
இதனால், தாம் திருவருளில் பெற்ற சையோகக் கலப்பைத் தெரிவித்தவாறாம். (11)
|