3213. எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன்
இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும்
உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப
உலகவிட யங்களையே விலகிவிட மாட்டேன்
கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன்
கருணையிலாக் கல்மனத்துக் கள்வன் எனைக் கருதிச்
சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான்
தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.
உரை: ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி கண்டு திருவுள்ளம் களிக்கக் கூத்தாடுதலை யுடைய சிவபெருமான் புரிந்த இந்த மிகப் பெரிய அதிசயத்தை என்னென்று சொல்லுவேன்; ஆசை யெல்லாம் விடுத்துக் காடுகளையும் மலைகளையும் அடைந்து மெய்யான தவம் புரியும் தவ முதல்வர்கள் திருவருள் பெற நினைந்து கண்ணுங் கருத்துமாய் இருந்தாராக, பொறி புலன்களால் நுகரப்படும் விடயங்களைச் சிறிதும் கைவிட மாட்டாதவனாகிய யான், கல்வியறிவு சிறிதுமின்றிக் கீழ் மக்களினும் கீழ் மகனாய் இரக்கமில்லாத கல் போன்ற மனத்தை யுடைய கள்வனாவேன்; இத்தகைய என்னையும் ஒரு பொருளாகக் கருதிச் சிறிது என்று சொல்ல முடியாத பெரிய திருவருளை எனக்கு இறைவன் அளித்துள்ளான். எ.று.
மண் பெண் பொன் என்ற பொருள்களின் மேல் கண் காது முதலிய கருவிகளின் வாயிலாக படர்ந்தெழும் ஆசைகள் தவம் புரிபவருக்கு இடையூறு செய்வனவாதலால், “இச்சை யெலாம் விடுத்து” என்று சொல்கின்றார். மேலும் தவயோகத்திற்கு மக்கள் சூழலும் ஊறு செய்வது கண்டு காடுகட்கும் மலைகட்கும் சென்று தனித்திருந்து அதனைச் செய்து திருவருள் நெறியில் ஒன்றியிருந்து அத்திருவருட் காட்சியை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருப்பது விளங்க, “வனத்திடத்தும் மலையிடத்தும் உற்று மெய்த்தவம் புரிவார் உன்னி விழித்திருப்ப” என்று உரைக்கின்றார். “அகனமர்ந்த அன்பினராய் அறுபகை செற்று ஐம்புலனும் அடக்கி ஞானம் புகலுடையோர்” (வீழி) என்று இவர்களை ஞானசம்பந்தர் குறிக்கின்றார். இவர்களின் வேறாகிய யான் ஐம்புலன்களால் நுகரப்படும் உலகியல் இன்பங்களைப் பற்றிவிடாது நுகர்ந் தொழுகுகின்றேன் என்பார். “உலக விடயங்களையே விலக விட மாட்டேன்” என வுரைக்கின்றார். அதற்குக் காரணம் கண்ட வடலூர் வள்ளல், தமக்கு நல்ல கல்வி யறிவு இல்லாமை என உணர்ந்தமை தெரிவிப்பாராய், “கற்றேதும் அறியகிலேன்” என இயம்புகின்றார். கற்பன கற்றும் மெய்யுணர்வு பெறாமை தோன்ற “கற்று ஏதும் அறியகிலேன்” எனக் கூறப்படுகிறது. அதனால் தாம் எய்திய சிறுமையை விளக்குதற்குக் “கடையரினும் கடையேன்” எனவும், இரக்கமில்லாத தன்மை உளதாயது பற்றிக் “கருணையிலாக் கல் மனத்துக் கள்வன்” எனவும் இசைக்கின்றார். கருணை - இரக்கம். இறைவன்பால் தான் பெற்ற திருவருள் மிகப் பெரியது என்பதை வலியுறுத்தற்கு, “சற்றேயும் அன்று மிகப் பெரிது” எனத் தெரிவிக்கின்றார்.
இதனால், தவயோகியருக்கும் எய்தாத பேரருள் தமக்கு எய்தியது எண்ணி
வியந்துரைத்தவாறாம். (12)
|