3215.

    ஓகோஈ ததிசயம்ஈ ததிசயம்என் னுரைப்பேன்
        உள்ளபடி உள்ளஒன்றை உள்ளமுற விரும்பிப்
    பாகோமுப் பழரசமோ எனருசிக்கப் பாடிப்
        பத்திசெய்வார் இருக்கவும்ஓர் பத்தியும்இல் லாதே.
    கோகோஎன் றுலகுரைப்பத் திரிகின்ற கொடியேன்
        குற்றமன்றிக் குணமறியாப் பெத்தன்எனைக் கருதித்
    தாகோத ரங்குளிரந்த தன்மைஒன்று கொடுத்தான்
        தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே.

உரை:

     ஒப்பற்ற சிவகாமவல்லியாகிய உமாதேவி கண்டு திருவுள்ளம் களிக்க நடம் புரியும் சிவபெருமான் புரிந்த இந்தப் பேரதிசயத்தை என்னென்று கூறுவேன்; உள்ளபடி உள்ளதாகிய பரம்பொருளை மனத்தால் விரும்பிப் பாகோ, மா முதலிய பழரசமோ என்று இனிக்கப் பாடி யன்பு செய்யும் பெருமக்கள் பலரும் இருக்க, சிறு பத்தியும் இல்லாமல் உலகவர் போக்கோ என்று இகழத் திரிகின்ற கொடியவனும், குற்ற மல்லது குணமே கண்டறியாத பெத்தனுமாகிய என்னையும் ஒரு பொருளாக எண்ணி வேட்கையால் வெதும்பிய வயிறு குளிரும் தன்மையுடைய திருவருளை எனக்குத் தந்தருளினான். எ.று.

     “பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்” என்று சான்றோர் இறைவனை ஓதுவதால், வடலூர் வள்ளல் “உள்ளபடி உள்ள வொன்று” என வுரைக்கின்றார். உள்ள மொன்றி நினையாவிடின் இறையின்பம் எய்தாதாகலின், “உள்ளமுற விரும்பி” எனக் கூறுகின்றார். “உள்ளமொன்றி உள்குவார் உளத்துளான்” (ஆரூர்) என ஞானசம்பந்தர் நவில்லது காண்க. முப்பழரசம், மா பலா வாழை ஆகிய மூன்று பழங்களின் சாறு. பத்தி - மிக்க அன்பு. கோகோ எனத் திரிதல் - ஆரவாரமாக இயலுதல், பெத்தன் - பாச பந்தங்களால் பிணிக்கப்பட்டவன். தாகம் - வேட்கையால் உளதாகும் வெப்பம். உதரம் - வயிறு. தாக உதரம் - உதர தாகம் என மாறி நின்றது. தாக உதரம், தாகோதரம் என வந்தது வடநூல் புணர்ப்பு.

     இதனால், பாடிப் பரவும் பக்தருக்கு எய்தாத திருவருள் தமக்கு எய்தினமை நினைந்து வியந்தவாறாம்.

     (14)