8. அபராத மன்னிப்பு மாலை
அஃதாவது, செய்துள்ள பிழைகளை மன்னித்தருள வேண்டிப் பாடும் பாமாலை. பிழைகளை அபராதம் என்பது வடமொழி மரபு. அதனால், இஃது அபராத மன்னிப்பு மாலை எனப்படுகிறது. இதன்கண் வடலூர் வள்ளல் பொய் கூறல், நன்னெறி யொழுகாமை, புலைத்தன்மை, தேர்ந்துணர்ந்து செய்யாமை முதவிய பிழைகள் தம்பால் நிகழ்ந்தமை கூறி அவற்றைப் பொறுத்தருள வேண்டுகின்றார். செய்த குற்றத்தை வாய்விட்டுரைத்தால் மீளவும் செய்யாமைக்கு அது துணையும் அரணுமாம் என்பர். ஒழுக்க நூல் அறிஞர். சமய நூல்கள் இதற்கு முதலிடம் தருதல் காணலாம். பிழை நிகழ்தற்குக் காரணம் அருள் ஞானமின்மை என்றும், இறைவன் திருவடி தீண்டப் பெறாமை என்றும் வள்ளலார் கூறுகின்றார்.
எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3216. செய்வகைநன் கறியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் அறிவறியாச் சிறியரினுஞ் சிறியேன்
பொய்வகையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
புண்ணியனே மதியணிந்த புரிசடையாய் விடையாய்
மெய்வகையோர் விழித்திருப்ப விரும்பிஎனை அன்றே
மிகவலிந்தாட் கொண்டருளி வினைதவிர்த்த விமலா
ஐவகைய கடவுளரும் அந்தணரும் பரவ
ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்தெம் அரசே.
உரை: ஐவகைத் தேவர்களும் அந்தணரும் வாழ்த்தி வணங்க ஆனந்தத் திருக்கூத்தை யம்பலத்தில் ஆடுகின்ற பெருமானே! புண்ணியனே; திங்கள் தங்கிய முறுக்கிய சடையினையும் உறுதியான எருதையும் உடைய பெருமானே; மெய்ம்மையாளர் பலர் பார்த்திருக்க, என்னை விரும்பி அந்நாளே வலிய வந்து ஆட்கொண்டு என் வினைகளை நீக்கிய விமலனே; அறிய வேண்டியவற்றை அறிந்து கொள்ளாத சிறுவரினும் சிறுமையுடையேனாதலால் செயல் வகைகளை அறியாமல் திருவருளோடு பிணங்கி வேண்டாத சிலவற்றைச் சொல்லி யுள்ளேன்; பொய் வகைகள் பலவுமுடைய யான், சொன்ன குற்றத்தைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.
புண்ணியம் வினையாதலால், புண்ணியப் பொருளாகிய பெருமானைப் புண்ணியனே என்று புகல்கின்றார். புரிசடை - முறுக்கிய சடை. மெய் வகையோர் - மெய்ஞ்ஞானிகள். மெய்ப்பொருள் வகையில் தலைசிறந்தது பரம்பொருளாதலின், அதனைக் கண்டு கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானிகளை “மெய் வகையோர்” என விளம்புகின்றார். விழித்திருத்தல் - பார்த்திருத்தல். அன்றென்றது, இளமைக் காலத்தில் ஒருநாள். இளமை உண்மை காணாது மறுப்பவும், வலிந்து ஆட்கொண்டமை பற்றி, “மிக வலிந்து ஆட்கொண்டருளி” என்று குறிக்கின்றார். அஞ்ஞானமாகிய அசத்து நீங்கினமை தெளிவாதலின், வினை தவிர்த்த விமலா” எனக் கூறுகின்றார். ஐவகைக் கடவுளர், பிரமன், திருமால், உருத்திரன், கணபதி, முருகன் ஆகியோர்; அந்தணர் - முனிவர்கள்; வேதியருமாம். தில்லையம்பலத்தின்கண் ஆனந்த நடனம் புரிவது விளங்க, “ஆனந்தத் திருநடஞ்செய் அம்பலத்து எம்மரசே” என்று போற்றுகின்றார். செய்வினையைத் திருந்தச் செய்வது செய்வகையாகும். அதனை நன்கு அறியாமை புலப்பட, “நன்கு அறியாதே” என்றும், அறிவு அறியாமை காரணமாக ஊடலும் பிணக்கும் தோன்றுவனவாதலின், “திருவருளோடு ஊடி” என்றும், முறை தவறிச் சில கூறினேன். என்பாராய், “சில புகன்றேன்” என்றும் இயம்புகின்றார். தமது அறியாமையை விளக்குதற்கு அறிவதறியாத சிறுமை “அறிவ தறியாச் சிறுவரினும் சிறியேன்” எனத் தெரிவிக்கின்றார். நினைவு சொல் செயல் என்ற மூவகையினும் பொய்ம்மை யுடையவன் எனத் தம்மை எடுத்தோதித் தமது பிழைகளைப் பொறுத்தருள வேண்டும் என்பார், “பொய் வகையேன் புகன்ற பிழை பொறுத்தருளல் வேண்டும்” என்று வேண்டுகின்றார்.
இதனால், பொய் புகன்ற பிழையைப் பொறுத் தருள்க என வேண்டியவாறாம். (1)
|