3217. நிலைநாடி அறியாதே நின்னருளோ டூடி
நீர்மையல புகன்றேன்நன் னெறிஒழுகாக் கடையேன்
புலைநாயேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூதகணஞ் சூழநடம் புரிகின்ற புனிதா
கலைநாடு மதியணிந்தகனபவளச் சடையாய்
கருத்தறியாக் காலையிலே கருணைஅளித் தவனே
தலைஞான முனிவர்கள்தந் தலைமீது விளங்கும்
தாளுடையாய் ஆளுடைய சற்குருஎன் அரசே.
உரை: பூத கணங்கள் பக்கத்தே சூழ்ந்து நிற்க அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற புனிதனே, கலைகளை விரும்பும் பிறைத் திங்களைக் கொண்ட பெருமை சான்ற பவளம் போன்ற சடையை யுடையவனே, நற்கருத்துக்களைத் தேர்ந்துணரும் பக்குவ மில்லாத இளமைக் காலத்தில் எனக்கு அருளறிவு தந்த பெருமானே, தலைசிறந்த ஞானத்தை யுடைய முனிவர்கள் தமது தலையால் வணங்கும் திருவடியை யுடையவனே, என்னை ஆட்கொண்டருளும் சற்குரு பரனே, ஞான நிலையை ஆய்ந்தறியாமல் நின்னுடைய திருவருளோடு பிணங்கி என் தன்மைக் கொவ்வாதவற்றை, நன்னெறிக்கண் நில்லாத கீழ்மை யுடையனாதலாலும், புலைத் தன்மையை யுடைய நாய் போன்றவனாதலாலும் வாயாற் சொல்லிப் பிழை செய்தேனாக, என்னைப் பொறுத்தருளல் வேண்டும், எ.று.
சிவபெருமான் திருக்கூத்தாடுமிடத்துப் பூதகணங்கள் சூழ்ந்து நின்று இசைபாடும் எனச் சான்றோர் கூறுதலின், “பூதகணம் சூழ நடம் புரிகின்ற புனிதா” எனப் புகழ்கின்றார். “பூதவினப் படை நின்றிசை பாடவும் ஆடுவர்” (தரும) என ஞானசம்பந்தர் கூறுவர். புனிதன் - தூயவன். கலை நாடும் - கலை வளர்ச்சியை விரும்பும் பிறைச் சந்திரன், கனபவளம் - உயரந்த பவளம், செந்நிற முடைமை பற்றி, செஞ்சடையைக் “கனபவளச் சடையாய்” எனக் கட்டுரைக்கின்றார். “கனபவளம் சிந்தும் கழிப்பாலை” (கழிப்பா) என நாவுக்கரசர் உரைப்பர். கருத்தறியாக் காலை, சொல்வோர் சொல்லும் கருத்துணரும் திறம் இளமைப் பருவம். அக்காலத்தேயே தமக்குத் திருவருளுணர்வு உண்டாயினமையைப் பிறாண்டும் “ஆடையிலே எனை மணந்த மணவாளா” (4091) எனக் கூறுதலால், “கருத்தறியாக் காலத்தே கருணை யளித்தவனே” என வுரைக்கின்றார். திருவடி தம் முடியிற் படும்படி வணங்கிப் பரவுகின்றார்களாதலால், “தலைஞான முனிவர்கள் தம் தலைமீது விளங்கும் தாளுடையாய்” என்று கூறுகின்றார். தலஞானம் - ஞான வகை யெல்லாவற்றினும் தலையாயதாகிய திருவருள் ஞானம். சற்குரு வரசு, மெய்ஞான குரவர்க் கெல்லாம் அரசாகத் திகழ்கின்ற சிவ குருபரன். நிலை - சி்வஞானச் செம்மை நிலை. இதனைத் “திருநின்ற செம்மை” எனத் திருநாவுக்கரசர் கூறுவர். திருவருள் துணை கொண்டு நாடி யறிதல் கடனாகவும் அதனைச் செய்யாத குற்றத்தை “நிலை நாடி யறியாதே நின்னருளோடு ஊடி” எனவும், தகவில்லாத சொற்களை வழங்கினேன் என்பார், “நீர்மையல புகன்றேன்” எனவும், செய்கைகளிலும் நன்னெறியைக் கடைப் பிடிக்கவில்லை என்றற்கு “நன்னெறி யொழுகாக் கடையேன்” எனவும், நெஞ்சால் ஞானநிலை நாடாமையும், வாயால் நீரல மொழிதலும், மெய்யால் நன்னெறி யொழுகாமையும் புலைத்தன்மை யுண்டு பண்ணுதலால், “புலை நாயேன்” எனவும் தம்மையே இழித் துரைத்துப் பிழை பொறுத்தருளல் வேண்டும் என்று உரைக்கின்றார்.
இதனால், நன்னெறி யொழுகாப் பிழை பொறுக்க வேண்டுமென வேண்டிக் கொண்டவாறாம். (2)
|