3219.

    நின்புகழ்நன் கறியாதே நின்னருளோ டூடி
        நெறியலவே புகன்றேன்நன் னிலைவிரும்பி நில்லேன்
    புன்புலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        பூரணசிற் சிவனேமெய்ப் பொருள் அருளும் புனிதா
    என்புடைஅந் நாளிரவில் எழுந்தருளி அளித்த
        என்குருவே என்னிருகண் இலங்கியநன் மணியே
    அன்புடையார் இன்படையும் அழகியஅம் பலத்தே
        ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும் பதியே.

உரை:

     மெய்யன்புடையவர் கண்டு மகிழும் அழகிய பொன்னம்பலத்தின்கண் அம்மையும் அப்பனுமாய் நின்று கூத்தாடுகின்ற தலைவனே; நிறைவாகிய ஞான சிவமூர்த்தியே, மெய்ப்பொருளாகிய சிவபோகத்தை அருளும் புனிதனே, அந்நாள் இரவில் என்பாற் போந்து திருவருள் நல்கிய குருபரனே, என் கண்களிரண்டிலும் விளங்கும் மணியாகியவனே, உன்னுடைய திருப்புகழ்களை யறியாமையால், நினது திருவருளோடு பிணங்கி, நல்ல ஞான நிலையை விரும்பாமல் புல்லிய புலைத் தன்மையால் பேசிய என் குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.

     சிவன்பால் உண்மையன்புடையார்க்கு அவன் எழுந்தருளும் இடம் இன்பம் தருவதாகலின், “அன்புடையார் இன்படையும் அழகிய அம்பலம்” என்றும், அங்கே அம்மையாய் ஒருபால் நின்றும், அப்பனாய் நின்றும் கூத்தாடுவது பற்றி, “ஆத்தாளும் அப்பனுமாய்க் கூத்தாடும்பதியே” என்றும் கூறுகின்றார். குறைவிலா நிறைவும் ஞான மூர்த்தமுமுடைய மெய்ப்பொருளாதலின், சிவபிரானை, “பூரண சிற்சிவனே மெய்ப் பொருள் அருளும் புனிதனே” என்று புகல்கின்றார். மெய்ப் பொருள் - சிவஞானம்; சிவப் பேறுமாம். முன்பொருநாள் இரவில் எழுந்தருளி ஞானம் அருளிய வரலாற்றுக் குறிப்பை, “அந்நாள் இரவில் என்புடை எழுந்தருளி யளித்த என் குருவே” என இயம்புகின்றார். கண்கள் காண ஒளி செய்யும் மணி போல உண்ணின்று காட்டும் உரவோனாதலின், “என்னிரு கண் இலங்கிய நன்மணியே” என்று கூறுகின்றார். நின்னுடைய பேரின்பம் பெருநெறிக்கண் நிற்றலை விரும்பாமையால் நினது திருப்புகழை அறியா தொழிந்தேன்; அதனால் சிவன் திருவருளோடு பிணங்கிப் பேதுற்று சிவநெறிக் காகாதனவே கூறினேன் என்பாராய், “நன்னிலை விரும்பி நில்லேன் நின் புகழ் நன்கறியாதே நின்னருளோடு ஊடி நெறியல புகன்றேன்” என்று உரைக்கின்றார். இவ்வாற்றால் புலைத் தன்மை யுற்றேன் என்பாராய், “புன் புலையேன்” எனவும், பிழை பொறுத்தருள்க என வேண்டுவார், “பிழை பொறுத்தருளல் வேண்டும்” எனவும் முறையிடுகின்றார்.

     இதனால், புலைத்தன்மை நோக்கிப் பிழை பொறுத் தருள்க என்று முறையிட்டவாறாம்.

     (4)