3221.

    பழுத்தலைநன் குணராதே பதியருளோ டூடிப்
        பழுதுபுகன் றேன்கருணைப் பாங்கறியாப் படிறேன்
    புழுத்தலையேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
        புண்ணியர்தம் உள்ளகத்தே நண்ணியமெய்ப் பொருளே
    கழுத்தலைநஞ் சணிந்தருளுங் கருணைநெடுங் கடலே
        கால்மலர்என் தலைமீது தான்மலர அளித்தாய்
    விழுத்தலைவர் போற்றமணி மன்றில்நடம் புரியும்
        மெய்ம்மைஅறி வின்புருவாய் விளங்கியசற் குருவே.

உரை:

     சிவ புண்ணியச் செல்வர்களின் மனத்தின்கண் எழுந்தருளும் மெய்ப்பொருளாகியவனே, கழுத்தின்கண் விடக்கறை பொருந்திய கருணை நிறைந்த பெருங்கடல் போன்றவனே, திருவடித் தாமரையை என் தலைமேல் வைத்தருளும் பெருமானே, உயர்ந்த தலைவர்களாகிய, முனிவர்கள் கண்டு துதிக்க, அழகிய பொற் சபையின் கண் கூத்தாடி யருளும் சச்சிதானந்தமாகிய சற்குரு மூர்த்தியே, அருட்பேற்றுக்குரிய பக்குவம் முற்றியிருப்பதை யுணராமல் அதனோடு பிணங்கிக் குற்றமானவற்றை எடுத்துரைத்த தவறுகளை யுடையேன்; திருவருட் பாங்கறியாமல் வஞ்ச மனத்தானாய்ப் புழுத்தலையை யுடைய கீழ் மகனாகிய என் பிழைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.

     பழுத்தல் - நுகர்தற் கேற்ற பக்குவம் உறுதல். தலைமைப் பதியாகிய சிவத்தின் திருவருள், “பதியிருள்” எனப்படுகிறது. பழுது - குற்றம். படிறு - வஞ்சகம். புழுத் தலையேன் - தூய்மையின்றிப் பேனும் ஈரும் நிறைந்த தலையையுடைய கீழ்மகன். சிவஞானத்தால் சிவ புண்ணியம் செய்யும் சான்றோர்களின் மனத்தின்கண் எழுந்தருளுதல் சிவ பரம்பொருளின் சிறப்பியல்பாதலின், “புண்ணியர் தன் உள்ளத்தே நண்ணிய மெய்ப் பொருளே” எனப் போற்றுகின்றார். கழுத்தின்றலை என்பது கழுத்தலையென வந்தது; தலை, ஏழாவதன் பொருட்டு. கடல் வகையனைத்தினும் பெரிதாதல் தோன்ற, “நெடுங் கடல்” எனச் சிறப்பிக்கின்றார். திருவடியைத் தமது முடிமேல் வைத்தருளிய குறிப்புப் புலப்பட, வடலூர் வள்ளல், “கால் மலர் என் தலை மீது தான் மலர அளித்தாய்” என வுரைக்கின்றார. விழுத் தலைவர் - உயரந்த தலைவர். ஈண்டு வியாக்கிரபாதர், பதஞ்சலி என்ற இருவரையும் குறிக்கிறது. சச்சிதானந்தம் என்ற தொடர், சத்து சித்து ஆனந்தமெனப் பிரிந்து “மெய்யறிவு இன்ப வுரு” என நின்றது. ஞானாசிரியன் என்பது பற்றிச் சிவனைச் “சற்குரு” எனக் கூறுகின்றார்.

     இதனைல், இறைவன் திருவடியைத் தமது தலைமேல் வைத்த குறிப்புத் தெரிவித்தவாறாம்.

     (6)