3223. திறப்படநன் குணராதே திருவருளோ டூடித்
தீமைபுகன் றேன்கருணைத் திறஞ்சிறிதுந் தெளியேன்
புறப்படிறேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
பூதமுதல் நாதவரைப் புணருவித்த புனிதா
உறப்படுமெய் உணர்வுடையார் உள்ளகத்தே விளங்கும்
உண்மையறி வானந்த உருவுடைய குருவே
சிறப்படைமா தவர்போற்றச் செம்பொன்மணிப் பொதுவில்
திருத்தொழில்ஐந் தியற்றுவிக்குந் திருநடநா யகனே.
உரை: நிலம் முதல் சிவம் ஈறாக வுள்ள தத்துவம் முப்பாறொடும் ஆன்மாவாகிய உயிரைக் கூட்டி வைத்த புனிதனே, பொருந்தக் தக்க மெய்யுணர்ந்த ஞானவான்களின், மனத்தின்கண் எழுந்தருளும் சச்சிதானந்த உருவைக் கொண்ட குருபரனே, சிறந்த மாதவர்கள் நின்று போற்ற, செவ்விய பொன்னும் மணியும் வேய்ந்த அம்பலத்தின்கண் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களை நிகழ்விக்கும் திருக்கூத்தையாடுகின்ற சிவ முதல்வனே, நின் திருவருட் சிறப்பை நன்கு உணராமையால் அதனோடு பிணங்கி, நின் கருணைத் திறங்களைச் சிறிதும் தெளியாமல் தீயவை சொல்லிக் குற்றப்பட்டுள்ளேன்; நின் அருளறத்துக்குப் புறமாகிய வஞ்சகனான என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.
பூத முதல் நாதவரை யென்றது நில முதற் பூதம் ஐந்து, கண் முதல் அறிகருவி ஐந்து, வாய் முதலிய செயற்கருவி யைந்து, மன முதலிய கரணம் நான்கு, கலை முதலிய வித்தியா தத்துவம் ஏழு, சிவமுதலிய சுத்த தத்துவ மைந்துமாகும். சிவ தத்துவம் நாதம் என வழங்கும். பூதமெனப் பொதுப்படக் கூறினமையின் தன் மாத்திரைகளும் அடங்கும். இவை முப்பத்தாறனுள் உயிர்ப் பொருட்டாகிய உலகம் அடங்குதலின், இவற்றோடு பிரிப்பறக் கலந்து நின்று உயிர்கள் வாழ்க்கை நிகழ்த்துவது பற்றி, “பூத முதல் நாதவரைப் புணருவித்த புனிதா” என்று புகல்கின்றார். சிவ பரம்பொருளின் உண்மைத் தன்மையை உணர்ந்த ஞானவான்களின் சிந்தையே கோயிலாகக் கொண்டவனாதலால், “மெய்யுணர்வுடையோர் உள்ளகத்தே விளங்கும் குருவே” என்று கூறுகின்றார். மெய்ம்மையும் அறிவும் இன்பமும் ஆகிய மூன்றும் கலந்த பரம்பொருளாதல் விளங்க, “உண்மை யறிவானந்த உருவுடைய குருவே” என்று இயம்புகிறார். எவ்வாற்றானும் எய்தப் படாத தன்றென்றற்கு “உறப்படும் மெய்யுணர்வு” எனத் தெரிவிக்கின்றார். மேலே தூய பொன் வேயப்பட்டு மணியிழைத்த மேடையை யுடையதாதல் பற்றி, “செம்பொன் மணிப் பொதுவில்” என்று புகழ்கின்றார். தொழில் ஐந்தாவன, படைத்தல், காத்தல், ஒடுக்குதல், அருளல், மறைத்தல் என்பனவாம். இவற்றுள் அருளலும் மறைத்தலும் உயிர்கட் கெனவும் ஏனை மூன்றும் உலகுக்கெனவும் பெரியோர் உரைப்பர். இவையைந்தும் சிவன் திருக்கூத்தில் விளங்குதலால், “திருத்தொழில் ஐந்து இயற்றுவிக்கும் திருநட நாயகனே” எனக் கூறுகின்றார். “தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில், சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமாம், ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோத முத்தி, நான்ற மலர்ப்பதத்தே நாடு” (உண்விளக்) எனப் பெரியோர் உரைப்பது காண்க. உணரப்படும் பொருளைப் பல திறமாக வகுத்துணரும் முறை பற்றி, திருவருட் செல்வத்தைப் பல திறமாகக் கண்டறிந்தேனில்லையென்பார், “திருவருளைத் திறம்பட நன்கு உணராதே ஊடி” எனவும், அக்குறைபாட்டால் அத்திருவருள் ஞானம் சிறிது மில்லேனாயினேன் என்றற்குக் “கருணைத் திறம் சிறிதும் தெளியே” னெனவும், எங்கும் தீமையே கண்டு அதனையே சொல்லித் திரிந்தேன் என்பாராய், தீமை புகன்றேன்” எனவும் இயம்புகின்றார். பிழை பொறுக்குமாறு பெரியோர்களை வேண்டுவது முறையாதலின், “பிழை பொறுத்தருளல் வேண்டும்” என முறையிடுகின்றார்.
இதனால், அருள் ஞான மின்மை கூறிப் பிழை பொறுக்க வேண்டியவாறாம். (8)
|