3224. தேர்ந்துணர்ந்து தெளியாதே திருவருளோ டூடிச்
சிலபுகன்றேன் திருக்கருணைத் திறஞ்சிறிதுந் தெரியேன்
போந்தகனேன் புகன்றபிழை பொறுத்தருளல் வேண்டும்
போதாந்த மிசைவிளங்கு நாதாந்த விளக்கே
ஊர்ந்தபணக் கங்கணமே முதற்பணிகள் ஒளிர
உயர்பொதுவில் நடிக்கின்ற செயலுடைய பெருமான்
சார்ந்தவரை எவ்வகையுந் தாங்கிஅளிக் கின்ற
தயவுடைய பெருந்தலைமைத் தனிமுதல்எந் தாயே.
உரை: தத்துவ ஞான நெறியின் முடியின் கண்ணதாகிய நாத தத்துவத்தின் விளக்கமாக வுள்ள பரசிவனே, ஊர்ந்து போகும் படத்தையுடைய பாம்பாலாகிய கங்கண முதல் பல்வேறு அணிகள் மேனியிற்கிடந்து அழகு செய்ய, உயர்ந்த அம்பலத்தின்கண் கூத்தாடும் தொழிலையுடைய பெருமானே, சார்ந்தவர் யாவரையும் எவ்வாற்றலும், தாங்கி யாதரிக்கின்ற பெரிய தலைவனாகிய ஒப்பற்ற முதல்வனே, எமக்குத் தந்தையாகியவனே, நினது திருவருள் ஞானத்தைப் பலவகையால் தேர்ந்து உணர்வதும் தெளிவதுமின்றிச் சில பிழைகளை நின் கருணைக் கூறுகளைச் சிறிதளவும் காணாமல் சொல்லிக் குற்றப் படுகின்றேன்; பனை மரம் போன்ற யான் பேசிய குற்றங்களைப் பொறுத்தருள வேண்டுகிறேன். எ.று.
ஞான நூல் பயில்வார்க்குத் தொடக்கத்திற் போதிப்பது தத்துவ ஞானமாதலால், அதனைப் போதமென்றும், அதன் முடிவில் இருப்பது நாத தத்துவமாதல் பற்றி, “போதாந்த மிசை விளங்கும் நாதம்” என்றும் அதன் முடிவின்கண் திகழ்வது பரசிவமாதலால், “நாதாந்த விளக்கே” என்றும் நவில்கின்றார். பணக் கங்கணம் - படத்தையுடைய பாம்பாலாகிய கங்கணம்.; கங்கணம் - முன் கைவளை. பணிகள் அணி வகைகள். தோள் வளையம், மார்பிலாரம், அரையிற் கச்சு முதலிய பணிவகை யாவும் சிவனுக்குப் பாம்பென்றரிக. பொது - அம்பலம். தன்னையே பற்றாகக் கொண்ட பேரன்பர்களை இடுக்கண் உறும் போதெல்லாம் அருள் செய்து ஆதரிப்பவனாதலால், “சார்ந்தவரை யெவ்வகையும் தாங்கி அளிக்கின்ற தயவுடைய பெருந் தலைமைத் தன்முதல்” என்று புகழ்கின்றார். “சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்” (வல்லம்) ஏன ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. அளித்தற்கேது தயவுடைமை யாதலால், “தயவுடைய தனிமுதல்” எனவும், “தன்னையடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தம் கடனாவது” (அதிகை) எனத் திருநாவுக்கரசர் கூறுவது காணின் தலைவர் தலைமைச் செயல் தேற்றமாதலால், “பெருந் தலைமைத் தனிமுதல்” எனவும் கூறுவது பொருத்தமாதலைக் காணலாம். அன்பர்கட்குத் தனி முதலாயினும் எங்கட்குள்ள தொடர்பு இது வென்றற்கு “எந்தாய்” என மொழிகின்றார். தேர்தல் - ஆராய்தல். உணரப்படும் பொருள்களை முதற்கண் ஆராய்தலும் பின்பு தெளிதலும் உண்மை நெறியாதலால், அது செய்யாது குற்றப் பட்டமை கூறுவார், “தேர்ந்துணர்ந்து தெளியாதே” எனவும், அதற்கு ஏது திருவருளோடு உளதாய பிணக்கம் என்றற்குத் “திருவருளோடு ஊடி” எனவும் இயம்புகின்றார். ஊடினார்க்கும் உறுதி நல்குவது அருளாளர் செயல்வகை; அது நின் சிறப்பியல் என்பது எனக்குத் தெரியாது என்பர், “திருக்கருணைத் திறம் சிறிதும் தெரியேன்” எனக் கூறுகின்றார். ஊடினும் உறுதியாவன செய்தலால் திருக்கருணை” யென்று சிறப்பிக்கின்றார். போந்தகன் - பனைமரம் ஒப்பவன்; போந்து என்னும் சொல்லடியாக உயர்திணைப் பெயர் பனைப் பொருட்டாய போந்து, போந்தை என அஃறிணைப் பெயராவது போலப் போந்தகன் எனக் ககர விடை நிலை பெற்றது. “ஊடுவதும் உன்னோடுவப்பதும் உணர்த்துவதும் எனக்கு உறுதி” (வாழாப்) என மணிவாசகர் உரைப்பது காண்க.
இதனால், தேர்ந்துணர்ந்து தெளியாத குற்றம் பொறுத்தல் வேண்டுமென முறையிட்டவாறாம். (9)
|