3228.

    தத்துவநிலைகள் தனித்தனி ஏறித்
        தனிப்பர நாதமாந் தலத்தே
    ஒத்ததன் மயமாம் நின்னைநீ இன்றி
        உற்றிடல் உயிரனு பவம்என்
    றித்துணை வெளியின் என்னைஎன் னிடத்தே
        இருந்தவா றளித்தனை அன்றோ
    சித்தநற் காழி ஞானசம் பந்தச்
        செல்வமே எனதுசற் குருவே.

உரை:

     சித்தர்கள் வாழும் நல்ல சீர்காழிப் பதிக்குரிய ஞானசம்பந்தர் எனப்படும் அருட் செல்வமாகிய என்னுடைய சற்குருவே, ஆன்ம தத்துவ முதலாகவுள்ள தத்துவ நிலை ஒவ்வொன்றையும் தனிக் தனி கண்டு, கடந்து சென்று மேலே யுள்ள ஒப்பற்ற பரநாதமாகிய இடத்தே தனக்கொத்த தன்மயமாய் நின்ற நின்னையின்றி, உயிரளவாய் நின்று திகழ்தல் உயிரனுபவமாகும்; இத்தனைத் தத்துவ வெளியில் என் தன்மை மாறாமல் என்னிலையில் என்னை இருக்கச் செய்தருளினாய். எ.று.

     மேற்கூறிய மூவகை யனுபவங்களையும் விளக்கலுற்ற வடலூர் வள்ளலார் உயிரனுபவம் பெறுமிடத்து அதன் உண்மை நிலையில் நிலமுதல் சிவ மீறாகவுள்ள தத்துவங்களினூடு மேற் சென்றும் கீழிறங்கியும் இயங்கும் திறத்தை எடுத்துரைப்பாராய், “தத்துவ நிலைகள் தனித்தனி ஏறித் தனிப்பரநாதமாம் தலத்தே ஒத்த தன்மயமாம் நின்னை நீயின்றி உற்றிடல் உயிரனுபவம்” என உரைக்கின்றார். “ஒத்த தன்மயமாம் நின்னை” எனச் சிவத்தைக் கூறியது, தத்துவந் தோறும் அதுவதுவாய்ச் சார்ந்த தன்மயமாகும் ஆன்ம வியல்பு உணர்த்துதற்கு. இத்தத்துவங்களிற் கலந்து இயலுமிடத்து உயிர் தன் தன்மை இழவாமை புலப்படுத்தற்கு “என்னை என்னிடத்தே இருந்தவாறளித்தனை” என மொழிகின்றார். தத்துவம் பலவும் தனித்தனி வெளியாமாதலின், “இத்துணைவெளி” என இயம்புகின்றார்.

     இதனால் உயிரனுபவம் விளக்கியவாறாம்.

     (3)