3229. தனிப்பர நாத வெளியின்மேல் நினது
தன்மயந் தன்மயம் ஆக்கிப்
பனிப்பிலா தென்றும் உள்ளதாய் விளங்கிப்
பரம்பரத் துட்புற மாகி
இனிப்புற ஒன்றும் இயம்புறா இயல்பாய்
இருந்ததே அருள னு பவம்என்
றெனக்கருள் புரிந்தாய் ஞானசம் பந்தன்
என்றும்என் சற்குரு மணியே.
உரை: திருஞானசம்பந்த ரெனப்படும் என் சத்தாகிய குருமணியே ஒப்பற்ற பரநாதமாகிய பரவெளியில் நின்மயம் நின்மயமேயாகி நிலவ அசைவின்றி என்றும் உள்ளதாய் விளங்கி, மேல் கீழ் என்ற பொருள் வகையில் உள்ளும் புறமும் கலந்து, கேட்போர் மகிழ ஒன்றும் உரைத்தற்கரிதாகும் இயல்புடையது அருளனுபவமாகும் என எனக்கு உரைத்தருளினாய். எ.று.
பரநாதத்துக்கு வேறாய் ஒன்றும் இன்மையால், “தனிப் பரநாதம்” எனவுரைக்கின்றார். உயிர் போலத் தத்துவங்களோடு கலக்குந்தோறும் தன்மை மாறுவ தின்மை விளங்க, “தன்மயம் தன்மாயமாகி” எனவுரைக்கின்றார். திருவருள் பரம்பொருளின் சமவேத சத்தியாதலின், “என்றும் உள்ளதாய்” என்றும், எல்லாப் பொருளிலும் கலந்தியங்கும் திறம் பற்றி, “பரம்பரத்துட் புறமாகி” என்றும், இத்தன்மைத் தென இயம்புதற்கில்லாமை நோக்கி, “ஒன்றும் இயம்புறா இயல்பாய் இருந்தது” என்றும் இசைக்கின்றார்.
இதனால், அருளனுபவத்தை விளக்கியவாறாம். (4)
|