3230. உள்ளத்தாய் விளங்கும் ஒருபெரு வெளிமேல்
உள்ளதாய் முற்றும்உள் ளதுவாய்
நள்ளதாய் எனதாய் நானதாய்த் தன்தாய்
நவிற்றருந் தானதாய் இன்ன
விள்ளொணா அப்பால் அப்படிக் கப்பால்
வெறுவெளி சிவ அனுபவம் என்
றுள்ளுற அளித்த ஞானசம் பந்த
உத்தம சுத்தசற் குருவே.
உரை: ஞானசம்பந்தரென்ற உத்தம சற்குருபரனே, உன் பொருளாய், விளக்கமுறும் ஒப்பற்ற பெருவெளிக்கு மேலிருப்பதாய், வெளி முற்றும் நிறைந்திருப்பதாய். அப்பெருவெளியின் நடுவிலும் இருப்பதாய், எனதாகவும் நானாகவும் தனதாகவும் சொல்லாற் சொல்ல வொண்ணாததாய் வாயால் உரைப்பரிதாகிய அப்பாலாய், அப்பாலுக்கு அப்பாலாகிய வெறுவெளி சிவானுபவமாகும் என உரைத்தருளினாய். எ.று.
இல்பொருள் நினைக்கவும் பேசவும் படாமைபற்றி, “உள்ளதாய்” என்றும், உணர்வார் உணர்வின்கண் உளதாதல் ஒளிர்தலால், “விளங்கும் ஒருபெருவெளிமேல் உள்ளதாய்” என்றும் உரைக்கின்றார். உள்ளதற்கு உளதாகும் இடம் குறித்தல் வேண்டுதலின் “ஒருபெருவெளி மேல் உள்ளதாய்” என்று கூறுகின்றார். “மேல்” என்பதால் பெருவெளிக்கண் இலதோ என ஐயுறாமைப் பொருட்டு, “முற்றும் உள்ளதுவாய் நள்ளதாய்” என இயம்புகின்றார். பெருவெளிக்குள் உறையும் உயிரில் பொருளும் உயிர்ப்பொருளுமாதல் தோன்ற, “எனதாய் நானதாய்” எனவும், தான் உண்மை காட்டற்குத் “தானதாய்” எனவும் சாற்றுகின்றார். நவிற்றல் சொற்களாற் சொல்லுதல். சொற் பொருள் வாயிலாகச் சொல் சொல்ல வொண்ணாமையுரைத்தற்கு “நவிற்றருந்தானதாய்” என்றும், சொல்ல வொண்ணாததை வாய் வழி ஒலிக் குறிப்பாலும் முகக் குறியாலும் தெரிவித்தலுண்மையின், “விள்ளொணா அப்பால்” என்றும், “அப்பாலுக் கப்பால்” என வழங்குவது பற்றி “அப் படிக்கப்பால் வெறுவொளி” என்றும் இனிதியம்புகின்றார். “அப்பாலுக் கப்பாலுக் கப்பாலானை” (ஆரூர்) எனவும், “அப்பாலுக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்” (அம்மானை) எனவும் பெரியோர் குறிப்பதறிக. சிவம் தவிர “அப்பாலில் வேறு யாதும் இன்மை பற்றி “வெறுவெளி” எனப்படுகிறது.
இதனால் சிவானுபவம் தெரிவித்தவாறாம். (5)
|