3231.

    பொத்திய மூல மலப்பிணி தவிர்க்கும்
        பொருள் அரு ளனுபவம் அதற்குப்
    பத்தியம் உயிரின் அனுபவம் இதனைப்
        பற்றறப் பற்றுதி இதுவே
    சத்தியம் எனஎன் தனக்கருள் புரிந்த
        தனிப்பெருங் கருணைஎன் புகல்வேன்
    முத்தியற் சிவிகை இவர்ந்தருள் நெறியின்
        முதலர சியற்றிய துரையே.

உரை:

     முத்துக்களாலான சிவிகை மேல் ஏறித் திருவருட் சிவ நெறிக் கரசராகிய ஞானசம்பந்தப் பெருமானே, உயிர்த் தொகையை அனாதியாகப் பிணித்திருக்கும் மூல மலத்தின் பிணிப்பைப் போக்குவது அருளனுபவமாகும்; அதற்குரிய பத்தியமாவது உயிரனுபவம்; வேறு பொருண் மேற் பற்றெல்லாம் நீங்க நீக்கிக் கைப்பற்றுக; இது உண்மை என எனக் கறிவுறுத்தருளிய நினது ஒப்பற்ற பெரிய கருணை நலத்தை என்னென்று சொல்லுவேன். எ.று.

     திருஞானசம்பந்தர் திருவரத்துறைக்கண் முத்துச் சிவிகைபெற்றதும் அப்போது அரத்துறை மேவிய சிவனருளை விதந்தோதியதும் பின்னர்த் தமிழ்நாட்டின் கண் சிவஞானப் பணி புரிந்ததும் நினைக்கப்படுதலால் “முத்தியற்சிவகை இவர்ந்து அருணெறியின் முதலரசியற்றிய துரையே” எனப் புகல்கின்றார். உயிர்களை அனாதியாகப் பிணித்துக் கொண்டிருப்பது பற்றி ஆணவமாகிய மூலமலத்தைப் “பொத்திய மூலமலப் பிணி” என்று மொழிகின்றார். பொத்துதல் - பொருந்துதல். ஏனைமாயை - கன்மங்களான மலங்கள் உயிரைப் பற்றுதற்கு ஏதுவாகலின், “மூல மலம்” என்று கூறுகின்றார். பிணி - பிணிப்பு; கட்டு என்றும் வழங்கும். மலப்பிணிப்பால் உளதாகும் இருள் திருவருளொளியால் நீங்குதல் பற்றி, “மலப்பிணி தவிர்க்கும் பொருள் அருள்” எனப் போதிக்கின்றார். அனுபவம் - காட்சி. பத்தியம் - உணவு ஒழுக்கமுறை. நோய்க்கு மருந்துண்பார் மேற் கொள்ளும் உணவு முறையும் ஒழுக்க நெறியும் பத்தியம் எனப்படும். அருளனபவம் உயிர் மருந்தாதல் புலப்பட “அதற்குப் பத்தியம் உயிரின் அனுபவம்” என அறிவிக்கின்றார். “சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே” என வரும் உலகியற் பழமொழி பற்றி, “இதனைப் பற்றறப் பற்றுதி, இதுவே சத்தியம்” என்று உரைக்கின்றார். பிற பொருள் மேல் உளதாகும் பற்றுக்களை விலக்குதலே பத்திய வகையாதலால், “பற்றறப் பற்றுதி” என்று பகர்கின்றார். பேரருளுடையார்க் கல்லது இவ்வுண்மையை யுரைக்கும் உள்ள முண்டாகாதாகலின், “தனிப் பெருங்கருணை என் புகல்வேன்” எனப் பராவுகின்றார்.

     இதனால் உயிரனுபவம் விளக்கியவாறாம்.

     (6)