3232. அடியெனல் எதுவோ முடியெனல் எதுவோ
அருட்சிவ மதற்கெனப் பலகால்
படியுற வருந்தி இருந்தஎன் வருத்தம்
பார்த்தரு ளால்எழுந் தருளி
மிடியற எனைத்தான் கடைக்கணித் துனக்குள்
விளங்குவ அடிமுடி என்றாய்
வடிவிலாக் கருணை வாரியே மூன்று
வயதினில் அருள்பெற்ற மணியே.
உரை: குறைவில்லாத கருணைக் கடலே, மூன்று வயதில் சிவனருளைப் பெற்ற ஞானமணியே, அருட்டிருமேனியை யுடைய சிவ பரம்பொருட்குத் திருவடியும் திருமுடியும் யாவையோ என்று இந்நிலவுலகத்தில் பலகால் எண்ணி வருந்திக் கிடந்த என் வருத்தமெல்லாம் கண்டு, அருள் கொண்டு, எதிரே வந்தருளி என் குறை முற்றும் நீங்கத் தன் கடைக்கண்ணாற் பார்த்தருளி, அந்த அடியும் முடியும் உனக்குள்ளே விளங்கித் தோன்றும் என அறிவித்தாய். எ.று.
மழை முகில் கொண்ட விடத்தும் குறை படாத இயல்பினது கடலாதலின், “வடிவிலாக் கருணை வாரியே” என வுரைக்கின்றார். “கொளக் குறை படாமையின் முந்நீரனையை” (பதிற். 90) எனச் சான்றோர் கூறுவதறிக. வாரி - கடல். வடிதல் - குறைதல். ஞானவொளியுடைமையால் “மணியே” எனப் புகழ்கின்றார். படி - பூமி. சிவத்துக்கு அடியும் முடியும் யாவை, எவ்விடத்தன என எண்ணியேங்கினமை விளங்கப் “பலகாற்படியுற வருந்தியிருந்த என் வருத்தம்” எனக் கூறுகின்றார். திருப்பதியந் தோறும் திருமாலும் பிரமனும் அடிமுடி தேடிய குறிப்பு ஞானசம்பந்தரால் ஓதப்படுதலின், இவ்வாறு ஐயுறுதற் கிடமுண்டாயிற்றென்க. மிடி - குறைவு; உணர்வின் இன்மையென்றுமாம். கடைக் கணித்தல் - ஈண்டு அருளுதல் குறித்ததாம். அவற்றை உன்னின் வேறாக நினைத்தல் வேண்டா; உனது உணர்வினுள் காணப்படும் என்பாராய், உனக்குள் விளங்குவ அடி முடி என்றாய்” என இயம்புகின்றார்.
இதனால் சிவத்தின் அடி முடி பற்றிய ஐயம் தீர்ந்தவாறாம். (7)
|