3234. முன்புறு நிலையும் பின்புறு நிலையும்
முன்னிநின் றுளமயக் குறுங்கால்
அன்புறு நிலையால் திருநெறித் தமிழ்கொண்
டையநீத் தருளிய அரசே
என்புபெண் ணுருவோ டின்னுயி ரதுகொண்
டெழுந்திடப் புரிந்துல கெல்லாம்
இன்புறப் புரிந்த மறைத்தனிக் கொழுந்தே
என்னுயிர்க் குயிர்எனுங் குருவே.
உரை: திருமயிலையில் குடத்திற் பெய்திருந்த என்பைப் பெண்ணுருவும் இன்னுயிரும் கொண்டு எழச் செய்து அதனைக் கண்டும் கேட்டும் உலகவர் இன்பமடையச் செய்த வேதியர் குலக் கொழுந்தாய் என் உயிர்க் குயிருமாகிய குருமுதல்வனே, முன்னைக் கால நிலையையும் பின்பு நிகழ விருக்கும் நிலையையும் மனத்தில் எண்ணியாய்ந்து, ஐயம் தோன்றி அலைக்கின்ற போது, அன்பு நெறியில் நின்று திருநெறித் தமிழ் கொண்டு ஐயத்தைப் போக்கியருளினாய். எ.று.
என்பு - திருமயிலைப் பூம்பாவையின் என்பு; இஃது எலும்பெனவும் வழங்கும். என்புக்கூடு கண்டு “மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன்மதி சூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல், கண்ணினாலவர் திருவிழாப் பொலிவு கண்டார்தல், உண்மையா மெனில் உலகர் முன் வருகென” (திருஞான. பு) ஞானசம்பந்தர் உரைப்பவும், “குடம் உடைந்தெழுவாள் போற்று தாமரைப் போதவிழ்ந் தெழுந்தனள் போன்றாள்” எனச் சேக்கிழார் எடுத்துரைக்கின்றார். உலகு, உலகு மக்கள். வேதியர் குலத்துச் சிறுவராதல் பற்றி, ஞானசம்பந்தரை “மறைத் தனிக்கொழுந்து” என வுரைக்கின்றார். அந்த ஞானசம்பந்தர்பால் தமக்குள்ள உண்மையன்பு விளங்க “என்னுயிக் குயிரெனும் குருவே” என்று வடலூர் வள்ளல் இயம்புகின்றார். முன்னை நாட்களிலிருந்த சமய சமுதாய நிலைமையையும் எதிர்காலத்தில் எய்தவிருக்கும் நிலைமையையும் இன்றுள்ள சூழ்நிலையையும் எண்ணியே. செயல்படவேண்டுதலின், “முன்புறு நிலையும் பின்புறு நிலையும் முன்னி நின்று” என மொழிகின்றார். நிகழும் சூழ்நிலை தெளிவின்றி ஐயத்தைப் பயப்பது ஒருதலையன்மையின் “உளம் மயக்குறுங்கால்” என்று இசைக்கின்றார். காய்தல் உவத்தலின் ஆய்தல் வேண்டுமாகலின் “அன்புறு நிலையால்” எனவும், ஆய்தற்கு நேரிய கருவியும் துணையுமாவது திருநெறித் தமிழ் என்பாராய், “திருநெறித் தமிழ் கொண்டு ஐயம் நீத்தருளிய அரசே” எனவும் இயம்புகின்றார். அனல் வாதப் புனல் வாதங்களில் முடிவு கண்டதும், ஆண்பனை பெண்பனை யாகியதும், என்பு பெண்ணுருவாயதும் பிறவும் தாம் பாடிய திருநெறித் தமிழாலேயோதல் காண்க. திருநெறி, சிவத்தை மேற்கொண்டொழுகும் சிவநெறியாதலால் அது பொருளாகப் பாடிய தமிழ்த் திருப்பதியங்களைத் “திருநெறித் தமிழ்” என்று கூறுகின்றார. தமது திருப்பதியத்தைத் திருஞானசம்பந்தர் “திருநெறிய தமிழ்” (பிரம) என வுரைப்பது காண்க.
இதனால் திருநெறித் தமிழின் சிறப்புரைத்துப் பாராட்டியவாறாம். (9)
|