3241. கண்ணுளே விளங்குகின்ற மணியே சைவக்
கனியேநா வரசேசெங் கரும்பே வேதப்
பண்ணுளே விளைந்தஅருட் பயனே உண்மைப்
பதியோங்கு நிதியேநின் பாதம் அன்றி
விண்ணுளே அடைகின்ற போகம் ஒன்றும்
விரும்பேன்என் றனையாள வேண்டுங் கண்டாய்
ஒண்ணுளே ஒன்பதுவாய் வைத்தாய் என்ற
உத்தமனே சித்தமகிழ்ந் துதவுவோனே.
உரை: ஒன்றாகிய உடம்பின்கண் ஒன்பது வாயில்களை வைத்தவனே என்று சிவபெருமானைப் பராவிய உத்தமனே, மனமகிழ்ச்சியுடன் உதவி புரியும் செல்வனே, கண்ணின்கண் விளக்கம் நல்கும் கருமணிபோல்பவனே, சைவம் பழுத்த கனி போன்றவனே, சொல்வேந்தனே, செங்கரும்பை ஒப்பவனே, வேதமாகிய கீதத்தின்கண் தோன்றும் திருவருட் பயனே, உண்மைத் தலைவனே, உயர்தோங்கும் நிதியே. நின்னுடைய திருவடியன்றி இந்திரவுலகத்துப் பெறலாகும் இன்பத்தையும் நான் விரும்பாமல் திருவருளால் நீ என்னை ஆண்டருளுவதொன்றையே விரும்பி வேண்டுகிறேன். எ.று.
திருநாவுக்கரசர் இறுதி நாளில் திருப்புகலூரிலிருந்து பாடிய திருத்தாண்டகத்தில் உடம்பையும் அதனால் அமைந்த ஒன்பது வாயில்களையும் சுட்டி, “ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்” என்று பாடி யருளியதை நினைந்து வியந்து ஓதுவதால் “ஒண்ணுளே ஒன்பது வாய் வைத்தாய் என்ற உத்தமனே” எனப் பாடுகின்றார். கண்ணுக்கு ஒளி நல்கும் பொருளாதலால் “கண்ணுளே விளங்குகின்ற மணியே” எனவும், சைவத் தவக்கோலத்துடன் விளங்குவது பற்றி, “சைவக் கனியே” எனவும், சிவந்த மேனியராதல் தோன்ற, “செங்கரும்பே” எனவும் இயம்புகின்றார். வேத கீதத்தின் இசைக்கும் பொருளாயினமை புலப்பட, “வேதப் பண்ணுளே விளைந்த அருட் பயனே” எனக் கூறுகின்றார். மெய்ம்மை யறத்திற்குத் தலைமைப் பொருளாய் விளங்குவது குறித்து “உண்மைப் பதி” என்றும், அதனிற் சிறந்த செல்வம் வேறின்மையால் ‘ஓங்கு நிதியே’ யென்றும் புகழ்கின்றார். முன்னை நாட்களில் பல கோடி யாகங்களைச் செய்து செல்வர்கள் யாகப் பயனாகிய விண்ணுலக இந்திர போகத்தை வேண்டி யொழுகினர்; வேதியர்களை அதனை யூக்கி வந்தனராதலால் “விண்ணுளே யடைகின்ற போக மொன்றும் விரும்பேன்” என்றும், விரும்புவது நின் திருவடி ஞானப்பேறே என வற்புறுத்தற்கு, “நின் பாதமன்றி விரும்பேன்” என்றும், “என்றனை யாள வேண்டும்” என்றும் விண்ணப்பிக்கின்றார்.
இதனால், திருப்புகலூர்த் திருத்தாண்டகத்தைச் சிந்தித்து வியந்தவாறாம். (5)
|