3242.

    ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்
        ஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்
    ஆங்காரப் பெருமதமால் யானை போல
        அகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்
    பாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்
        பரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ
    தீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன
        செய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே.

உரை:

     திருநாவுக்கரசராகிய பெருமானே. ஓம் என்ற தனிச் சொல்லின் பொருட் பயனை என் அறிவின் சிறுமையால் யான் சிறிதும் அறியேன்; இந்த உலகியல் வாழ்வில் அகங்கார மென்ற பெரிய மதங்கொண்டு பெரிய யானை போல் மமதை மயமாகி உலகில் அலைகின்றேன்; உன் திருவருட் பாங்கராகிய மெய்யடியார்களைப் போல் நின்பாற் சிறிதும் அன்பு கொண்டிலேன்; ஆனால், தீயவை யனைத்தும் உடையவனாதலால், யான் யாது செய்வேன்; என்னசெய்வேன். எ.று.

     ஓம் என்னும் தமிழ்ச் சொல்லை ஓங்கார மென்பர்; வடமொழியிற் பிரணவம் என்பர். இறைவனை ஓங்காரமாய் நின்றவன் எனவும், ஓங்காரவுருவின னென்றும், ஓங்காரத் துட்பொருள் என்றும், திருநாவுக்கரசரை யுள்ளிட்ட சான்றோர் பலரும் பல விடங்களிற் கூறுதலால், “ஓங்காரத் தனி மொழியின் பயனைச் சற்றும் ஓர்கிலேன்” என்று கூறுகின்றார். பயன்பொருள். அகங்காரம் என்பது ஆங்காரம் என வழங்கும். இதனை வடமொழியில் மமதை என்பர். யான் செய்தேன், எனது இது என வெழும் செருக்கு எனவும், மதம் எனவும் கூறுவர். அகம்பாவம் என்று உலகோர் குறிப்பர். செருக்கே யுருக் கொண்டாற் போலும் தோற்றமுடையவனை “அகம்பாவி” என்பர். செருக்கு வழிப் பிறக்கும் சொற் செயல்களை யுடைவனை “அகம்பாவ முடையவன்” என்பது முண்டு. மால் யானை - மதம் பொழியும் பெரிய யானை. அகம்பாவிக்கு ஆங்காரமல்லது பற்றுக் கோடு இன்மையின், அலைவதே செய்வது பற்றி, “அலைகின்றேன்” என வுரைக்கின்றார். பாங்காய மெய்யடியர், துணைவர் போலச் சூழ்ந்திருத்தல் பற்றி, அடியார்களைப் “பாஙகாயவர்” எனக் குறிக்கின்றார். மெய்யடியாரிடத்து அன்பு செய்யின், அவர்களையுடைய ஆண்டவனுக்கு அன்பு செய்யு மவர்பால் அருளுண்டாம் என்பது உலகியலுண்மை; யான் அதுதானும் செய்திலேன் என்பாராய், “மெய்யடியர் தம்மைச் சற்றும் பரிந்திலேன்” என்றும், அதனால் இறையருள் பெறும் தகுதியிலேனாயினேன் என்பார், “அருளடையும் பரிசு ஒன்றுண்டே” என்றும், அருட் பேற்றுக்குரிய தகுதியில்லேனாயினும், அதற்கு மாறாய தீயரை யனைத்தும் என்பால் உள்ளன என்பாராய், “தீங்காய செயலனைத்தும் உடையேன்” என்றும், எனவே, யான் செயலற்று வருந்துகின்றேன் என்பார், “என்செய்வேன் என் செய்குவேனே” என்றும் முறையிடுகின்றார்.

     இதனால் தகவின்மை கூறி வருந்தியவாறாம்.

     (6)