3243. செய்வகைஒன் றறியாத சிறியேன் இந்தச்
சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி அந்தோ
பொய்வகையே புரிகின்றேன் புண்ணி யாநின்
பொன்னடியைப் போற்றிலேன் புனித னேநான்
உய்வகைஎவ் வகையாது செய்வேன் நீயே
உறுதுணைஎன் றிருக்கின்றேன் உணர்வி லேனை
மெய்வகையிற் செலுத்தநினைத் திடுதி யோசொல்
வேந்தேஎன் உயிர்த்துணையாய் விளங்குங் கோவே.
உரை: சொல்லரசாகிய திருநாவுக்கரசரே, செய்தற் குரியவற்றைச் செய்யும் திறம் அறியாத சிறுமை யுடையவனாகிய யான், இந்தச் சிறுமை மிக்க உலக வாழ்விற் சிக்கிப் பொய்யான செயல்களைப் புரிகின்றேனேயன்றிப் புண்ணியப் பெருமானாகிய உனது அழகிய திருவடிகளைப் பரவுவதில்லை; தூயவனே, இத்தகைய எனக்கு உய்தி யாதாம்? அதன் பொருட்டு யான் யாது செய்தல் வேண்டும்? நீ யல்லது துணை வேறு இல்லை யென்ற கருத்தோடிருக்கின்றேன்; நல்லுணர்வு இல்லாதவனாகிய என்னை யுண்மை நெறியிற் செலுத்தி உய்விக்க எண்ணுகின்றாயோ? உயிர்க்குத் துணையாக விளங்கும் பெருந்தகையாதலின், எனக்கு உரைத்தருள்க. எ.று.
அற முதலிய பேருலக உறுதிப் பொருட்கு ஆவனவற்றைச் செய்து கோடற்குரிய எனக்குச் செய்யும் திறம் தெரியாமையால் சிறுமை யுற்றேனென்பாராய், “செய்வகை யொன்றறியாத சிறியேன்” என்று இயம்புகின்றார். அறியாமைக்குக் காரணம் கூறுவாராய், அழியாப் பேரின்ப
மேலுலகினை நினையாமல் அழியும் சிற்றின்ப மண்ணுலக வாழ்வுக்குரிய வற்றையே நினைந்து அல்லற் படுவது விளங்க “இந்தச் சிற்றுலக வாழ்க்கையிடைச் சிக்கி” என வுரைக்கின்றார். செய்வகை யாவும் பொய்ப் பயன் நல்கிக் கெடுப்பது விளங்க, “அந்தோ பொய் வகையே புரிகின்றேன்” எனவும், உனது பொன்னார் திருவடியைப் புகழ்ந்து போற்றுகின்றேனில்லை என்பாராய், “புண்ணியா நின் பொன்னடியைப் போற்றிலேன்” எனவும் எடுத்துரைக்கின்றார். இச்சிக்கலினின்றும் உய்ந்து போதற்கு ஏற்ற நெறி யறியாமல் வருந்துதல் தோன்ற, “உய்வகை எவ்வகை” எனக் கேட்கின்றார். செயலறியாமையும் சிந்தனையின்மையும் தம்பால் உளவாதலை யுணர்ந்து “யாது செய்வேன் நீயே உறுதுணை யென்றிருக்கின்றேன்” என வுரைக்கின்றார். உண்மையுணரும் திறமின்மை எடுத்தோதித் தம்மைச் செம்மை நெறியிற் செலுத்துதல் வேண்டுமென இறைஞ்சுகின்றாகலின், “உணர்விலேனை மெய்வகையிற் செலுத்த நினைத்திடுதியோ” எனவும், என் உயிர்க்குத் துணை யாவது நினதருளல்லது வேறில்லை யென முறையிடுவாராய், “உயிர்த்துணையாய் விளங்கும் தேவே” எனவும் கூறுகின்றார்.
இதனால், மெய்வகையில் தம்மைச் செலுத்துக என வேண்டியவாறாம். (7)
|