3244. விளங்குமணி விளக்கெனநால் வேதத் துச்சி
மேவியமெய்ப் பொருளைஉள்ளே விரும்பி வைத்துக்
களங்கறுமெய் யன்பரெல்லாங் களிப்ப அன்றோர்
கற்றுணையாற் கடல்கடந்து கரையிற் போந்து
துளங்குபெருஞ் சிவநெறியைச் சார்ந்த ஞானத்
துணையேநந் துரையேநற் சுகேம என்றும்
வளங்கெழும்ஆ கமநெறியை வளர்க்க வந்த
வள்ளலே நின்னருளை வழங்கு வாயே.
உரை: சிவகாம நெறி என்றும் தமிழுலகில் வளர்தற்கென எழுந்தருளிய வள்ளலாகிய திருநாவுக்கரசப் பெருமானே, ஒளி செய்யும் மணி விளக்குப் போல நான்காகிய வேதங்களின் முடிபொருளாகப் பொருந்திய மெய்ம்மை சான்ற பரம்பொருளை, யுள்ளத்திற் கொண்டு குற்றமில்லாத மெய்யுணர்வுடைய மேலோரனைவரும் மனம் மகிழ அந்தநாளில் கல்லைத் தெப்பத் துணையாகப் பெற்றுக் கடலில் மிதந்து கரையடைந்து நாடெங்கும் திரிந்து அசைவுற்றிருந்த சிவநெறியைப் பேணி யுயர்த்த ஞான நெறித் துணைவரே, எமக்குத் தலைவரே, எங்கட்குச் சிவானந்த சுகப் பொருளே, நினது திருவருளை எமக்கு நல்குக. எ.று.
ஆகமநெறி, சித்தாந்த நெறி யெனப்படுதலால், சித்தாந்த சைவம் ஆகம நெறி யென வுரைக்கின்றார். வேதங்களாகிய திருக்கோயிலின் முடிமணியாகத் திகழ்வது சிவ பரம்பொருளாதல் பற்றி, “விளங்கு மணி விளக்கென நால்வேதத் துச்சி ேமவிய மெய்ப்பொருள்” என விளம்புகின்றார். களங்கம் - குற்றம்; ஈற்று அம்முச் சாரியை கெட்டுக் களங்கு என வந்ததாம். உண்மை யன்புருவாகிய சான்றோர்களை மெய்யன்பர் எனக் கூறுகின்றார். நாவுக்கரசர் பால் பேரன்பு கொண்ட அப்பூதியடிகள் முதலியோர் ஈண்டு நினைக்கப்படுகின்றனர், கல்லிற் பிணித்துக் கடலில் தள்ளப் பட்ட போது ஆழ்ந் தொழியாது மிதந்து கரை யேறிய செய்தியை, “கற்றுணையாற் கடல் கடந்து கரையிற் போந்தே” என்று கூறுகின்றார். நாவுக்கரசர் காலத்தில் சமண சமயம் செல்வாக்கு மிக்கிருந்தமையால் சைவநெறி மக்களிடையே சோர்ந்திருந்தமையால், “துளங்கு பெருஞ் சிவநெறி” எனக் குறித்துரைக்கின்றார். ஞானத் துணை - ஞானப் பேற்றுக்கு வாய்ந்த துணை.
இதனால் திருவருள் வழங்குக என வேண்டியவாறாம். (8)
|