3245. அருள்வழங்குந் திலகவதி அம்மை யார்பின்
அவதரித்த மணியேசொல் லரசே ஞானத்
தெருள்வழங்கும் சிவநெறியை விளக்க வந்த
செழுஞ்சுடர்மா மணிவிளக்கே சிறிய னேனை
இருள்வழங்கும் உலகியல்நின் றெடுத்து ஞான
இன்னருள்தந் தாண்டவருள்வாய் இன்றேல் அந்தோ
மருள்வழங்கும் பவநெறியிற் சுழல்வேன் உய்யும்
வகைஅறியேன் நின்னருட்கு மரபன் றீதே.
உரை: திருவருட் செல்வியாகிய திலவகவதி யம்மையார்க்குப் பின்னே தம்பியாகப் பிறந்த மாணிக்க மணி போன்றவரே, திருநாவுக்கரசரே, ஞானத் தெளிவு நெறியாகத் திகழும் சிவநெறி நுட்பத்தை உலகவர் விளக்கமாக அறியச் செய்த வளவிய ஒளி செய்யும் மணி விளக்கேம, அறிவாற் சிறியவனாகிய என்னை இருள் செய்யும் உலகியற் போக்கினின்றும் மாற்றிச் சிவஞானமாகிய இனிய திருவருள் தந்து உய்வித்தருளுதல் வேண்டும்; இல்லையாயின், ஐயோ, மருட்சியால் உளதாகும் பவநெறியிற் சென்று அலமந்து கெடுவதோடு உய்யும் நெறி யறியாமல் வருந்துவேன்; அது நின் திருவருள் நெறிக்கு முறையாகாது, காண். எ.று.
திலகவதியார் பிறந்த சில ஆண்டுகட்குப் பின் அவருடைய தாய் வயிற்றில் தோன்றினமை பற்றி, “திலகவதி யம்மையார் பின் அவதரித்த மணியே” எனவும், “தம்பியார் உளராக வேண்டுமென” (திருநா. புரா)த் திலகவதியார் மனத்திற் கொண்ட தயவு) சிவநெறி மாண்புறுவித்த குறிப்புப் பற்றி, “அருள் வழங்கும் திலகவதி யம்மையார்” எனவும் சிறப்பிக்கின்றார். சொல்லரசு - நாவுக்கரசு. பலவகையான சமய ஞானங்களில் தெளிவு மிக்கிருத்தல் பற்றி, “ஞானத் தெருள் வழங்கு சிவநெறி” என்று தேற்றமாக வுரைக்கின்றார். திருநாவுக்கரசரின் திருமுறைப் பாட்டுக்கள் சிவநெறி யுண்மைகளை யாவரும் இனிது உணர விளக்குவது கொண்டு, “சிவநெறியை விளக்கச் செழுஞ்சுடர் மாமணி விளக்கே” என ஓதுகின்றார. நிகழ்ந்ததை மறதியாலும், எதிர்வில் நிகழ விருப்பதை மலமறைப்பாலும் இருள் செய்தலால், “இருள் வழங்கும் உலகியல்” என்று கூறுகின்றார். அருள் - தெளிந்த அருள் ஞானம்; அஃது அழிவில் பேரின்பம் நல்குவதால், “இன்னருள்” எனப்படுகிறது. அந்த ஞானம் இல்லா தொழியின் எய்தும்n தீதுகளைத் தெரிவிக்கலுற்றவர், “மருள் வழங்கும் பவநெறியிற் சுழல்வேன்” எனவும், “உய்வகையும் அறியேன்” எனவும் இயம்புகின்றார். மருள் - பயனில்லதைப் பயனுடையதாக மாறியுணரும் அறியாமை. பவநெறி - பிறந்திறந்துழலும் துன்ப நெறி. அருணெறிக்கு மாறாதலால், “ஈது நின்னருட்கு மரபன்று” என மொழிகின்றார்.
இதனால், சிவஞான இன்னருள் தருக என வேண்டிக் கொண்டவாறாம். (9)
|