3246.

    தேர்ந்தஉளத் திடைமிகவும் தித்தித் தூறும்
        செழுந்தேனே சொல்லரசாம் தேவே மெய்யம்மை
    சார்ந்துதிகழ் அப்பூதி அடிகட் கின்பம்
        தந்தபெருந் தகையேஎம் தந்தை யேஉள்
    கூர்ந்தமதி நிறைவேஎன் குருவே எங்கள்
        குலதெய்வ மேசைவக் கொழுந்தே துன்பம்
    தீர்ந்தபெரு நெறித்துணையே ஒப்பி லாத
        செல்வமே அப்பனெனத் திகழ்கின் றோனோ.

உரை:

     தேர்ந்து தெளிந்த சான்றோர் மனத்தின்கண் சுரந்து தித்திக்கும் செழுமையான தேன் போன்றவனே, நாவுக்கரசு என்னும் தெய்வே­ம, உண்மைத் தன்மை பொருந்திய அப்பூதி யடிகட்கு மெய்ம்மைத் திருவருளின்பத்தை நல்கிய பெருந்தகையே, எங்கட்குத் தந்தையாகியவனே, உள்ளம் நிறைந்த பேரறிவானவனே, எனக்குக் குரு முதல்வனே, எங்கள் குலத்துக்கு ஒத்த தெய்வே­ம, சைவக் கொழுந்தே, துன்பமில்லாத பெருநெறிக்குத் துணையாயவனே, ஒப்புயர் வில்லாத செல்வே­ம, “அப்பர்” என்ற சிறப்புப் பெயருடன் விளங்குகின்றவனே, உன் திருவடிகட்கு என் வணக்கம். எ.று.

     கற்பன கற்றுத் தெளிந்தோர் திருவுள்ளத்தைத் “தேர்ந்த வுளம்” எனவும், தெளிவு இன்பம் பயத்தலின், “தித்தித் தூறும் செழுந்தேன்” எனவும் இனிதுரைக்கின்றார். சொல்லரசு - திருநாவுக்கரசு. தெய்வத் திருவருள் கைவரப் பெற்ற சான்றோராதலால் “தேவே” என்கின்றார். உண்மையே யுருவாக அமைந்தவராதலால் திங்களூர் அப்பூதியடிகளை மெய்ம்மை சார்ந்து திகழ் அப்பூதி யடிகள்” என்றும், அரவு கடித்திறந்தவர் மகனை உயிர்ப்பித்து அவர் மனையின்கண் விருந்துண்டு மகிழ்வித்தமைக்கு வியந்து, “அடிகட்கு இன்பம் தந்த பெருந்தகையே” என்றும் இயம்புகின்றார். திருநாவுக்கரசர் கல்வி கேள்வி ஞானங்களாற் பெரியவர் என்பது உலகறிந்த செய்தியாதலின், “உள் கூர்ந்த மதி நிறைவே” என்று கூறுகின்றார். வேளாளர்களின் சைவக் குலத்துக்குத் தெய்வமாய்த் திகழ்தல் விளங்க, “எங்கள் குலதெய்வே­ம” எனப் போற்றுகின்றார். தமக்கும் பிறர்க்கும் துன்பம் நல்காத “தயாமூலதன்மம்” என்னும் பெருநெறி காட்டித் துணை புரிந்தமையின், “துன்பம் தீர்ந்த பெருநெறித் துணையே” என்றும், நாவுக்கரசரைப் பலரும் “அப்பர்” எனச் சிறப்பித்துப் போற்றுதல் பற்றி, “அப்பனெனத் திகழ்கின்றோனே” என்றும் பரவுகின்றார். “தயாமூலதன்ம மென்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க் கெல்லாம் நலம் கொடுக்கும் நம்பி” (நள்ளா) என நாவுக்கரசர் உரைப்பது காண்க.

     இதனால், அப்பூதியடிகள் பெற்ற இன்பத்தைச் சிறப்பித்து அப்பர் என்ற பெயர் மாண்பை ஓதியவாறாம்.

     (10)