11. ஆளுடைய நம்பிகள் அருள் மாலை

    அஃதாவது, சுந்தரமூர்த்திகளைப் போற்றி வழிபடும் சொன்மாலை என்பதாம். சுந்தரர்க்கு நம்பியாரூரர் என்பது இயற்பெயராதலின் ஆளுடைய நம்பிகள் என நவில்கின்றார். இதன்கண் நம்பியாரூரர் வாழ்க்கையில் அவர் இறைவன் திருவடி தீண்டப் பெற்றது, அவிநாசியில் முதலை யுண்ட பாலனை வருவித்தது, ஆற்றிலிட்ட பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் எடுத்தது, பரவையார் மனைக்கு இறைவனைத் தூது விடுத்தது, கயிலை சென்றது முதலிய அற்புத நிகழ்ச்சிகள் வியக்கப்படுகின்றன; வேதாகம நெறிகள் திருந்த வுரைப்பதும், ஏழிசையாய் என்ற திருப் பாட்டை யெண்ணி உளம் உருகுவதும், பாட்டனுபவம் பகர்தலும் பிறவும் ஓதப்படுகின்றன.

கொச்சகக் கலிப்பா

3247.

    மதியணிசெஞ் சடைக்கனியை மன்றுள்நடம் புரிமருந்தைத்
    துதியணிசெஞ் சுவைப் பொருளில் சொன்மாலை தொடுத்தருளி
    விதியணிமா மறைநெறியும் மெய்ந்நிலைஆ கமநெறியும்
    வதியணிந்து விளங்கவைத்த வன்தொண்டப் பெருந்தகையே.

உரை:

     வன்றொண்டர் எனப்படும் பெருமானே, பிறைத் திங்களைச் சூடிய சிவந்த சடையையுடைய கனி போன்றவனும், அம்பலத்தின்கண் திருக்கூத்தாடுகின்ற அமுது போன்றவனுமாகிய சிவபெருமானைத் துதிப்பது பொருளாகச் செஞ்சொற் சுவை மிக்க பொருள் நிறைந்த சொன்மாலைகளைப் பாடி, விதிகள் பொருந்திய மறைகள் உரைக்கின்ற வைதிக நெறியும் மெய்ம்மை சான்ற ஆகம நெறியும் நிலைபெறுவித்து உலகில் விளங்க வைத்தருளினாய்; உன்னை வணங்குகிறேன். எ.று.

     “தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபை முன். வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்” என்று ஆளுடைய நம்பிகளே சொல்லுதலால், “வன்றொண்டப் பெருந்தகையே” என வுரைக்கின்றார். மதி - பிறைத் திங்கள். செஞ்சடையில் வெண்பிறை இருந்து அழகு செய்தலின், “மதியணி செஞ்சடை” எனவும், பலாக் கனி முதலியவற்றிச் சடை யுண்மையின், அந்த நயம் தோன்றச் “சடைக்கனி” எனக் கூறுகின்றார். சிவனைப் போலக் கனியும் பொன்னிற முடையதென அறிக. அம்பலத்துத் திருக்கூத்துக் காண்பார்க்குப் பிறவி நோய் காக்கும் மருந்தாதலால், “நடம்புரி மருந்து” எனப் புகழ்கின்றார். சொற் சுவை பொருட் சுவைகள் நிறைந்தவையாதலால், “செஞ்சுவைப் பொருளின் சொன்மாலை” எனப் பாராட்டுகின்றார். நால் வேதப்பிராமணங்கள் விதி வாய்ப்பாட்டில் அமைந்திருத்தலால் “விதியணி மாமறை நெறி” எனவும், சரியை முதல் ஞானம் ஈறாக நாற் பாதங்களாகப் பிரிந்து பொருள்களின் மெய்ம்மையை வலியுறுத்துதலின், “மெய்ந்நிலை ஆகம நெறி” எனவும் இயம்புகின்றார். வதிதல் - தங்குதல்.

     இதனால், வேதாகாம நன்னெறிகளை நிலைபெறுவித்தமை கூறியவாறாம்.

     (1)