3248.

    நீற்றிலிட்ட நிலையாப்புன் னெறியுடையார் தமைக்கூடிச்
    சேற்றிலிட்ட கம்பமெனத் தியங்குற்றேன் தனை ஆளாய்
    ஏற்றிலிட்ட திருவடியை எண்ணிஅரும் பொன்னையெலாம்
    ஆற்றில்இட்டுக் குளத்தெடுத்த அருட்டலைமைப் பெருந்தகையே

உரை:

     எருதாகிய ஊர்தி ே­மல் வைத்தருளிய சிவபெருமான் திருவடியை மனத்திற் கொண்டு மணி முத்தாற்றிற் பெய்த பொன்னைத் திருவாரூர்க் குளத்தில் எடுத்த, திருவருளால் தலைமை சான்ற வன்றொண்டப், பெருமானே, சுண்ணாம்பு நீற்றில் வெந்தழிந்து கெடும் பொருள் போன்று நிலையாத தீநெறியைக் கடைப் பிடிப்பவர்களோடு கூடிச் சேற்றில் நிறுவிய கம்பம் போல நில்லாது சாய்ந்து விழும் என்னை ஆண்டருள்வாயாக. எ.று.

     நீறு - சுண்ணாம்பு நீறு; சுண்ணாம்பை வேக வைக்கும் நீற்றறை என்றும் கூறுவர். நீற்றிலிட்டது நிலையாது கெடுதல் போலத் தீநெறிகளை யுடையவர் கெடுவது பற்றி, “நிலையாப் புன்னெறி யுடையார் தமைக் கூடி” என்றும், சேற்றில் நட்ட கம்பம் நில்லாது சாய்தல் போல் நிலை பேறின்றிக் கீழ் விழுமாறு புலப்பட, “சேற்றிலிட்ட கம்பம் எனத் தியங்குற்றேன்” என்றும் தெரிவிக்கின்றார். எருதேறும் பெருமானானது பற்றிச் சிவபெருமான் திருவடியை “ஏற்றிலிட்ட திருவடி” என்கிறார். “வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு மணி முத்தாற்றில், பொற்றிரளெடுத்து நீருள் புகவிட்டுப் போதுகின்றார்” (ஏயர்) எனச் சேக்கிழார் உரைப்பர். திருவாரூர்க் குளத்தில் பரவையார் கண்டு நிற்க இறங்கி, “ஓட்டறு செம்பொன்னொக்க ஒருமாவும் குறையாமல் காட்டுதலும் மகிழ்ந்தெடுத்துக் கொண்டு கரையேறினார்” (ஏயர். 137) எனச் சேக்கிழார் உரைத்தருளுவ தறிக.

     இதனால், ஆற்றிலிட்ட பொன்னைக் குளத்திற் பெற்ற அற்புதத்தை வியந்தவாறாம்.

     (2)