3249.

    இலைக்குளநீ ரழைத்ததனில் இடங்கர்உற அழைத்ததன்வாய்த்
    தலைக்குதலை மதலைஉயிர் தழைப்பஅழைத் தருளியநின்
    கலைக்கும்வட கலையின்முதற் கலைக்கும்உறு கணக்குயர் பொன்
    மலைக்கும்அணு நிலைக்கும்உறா வன்தொண்டப் பெருந்தகையே.

உரை:

     வன்றொண்டர் என்னும் பெருந்தகையாகிய பெருமானே, இலைகளும் கொடிகளும் விரவிய குளத்தில் நீர் நிறைவித்து அதன்கண் முன்னிருந்த முதலையை வருவித்து அதன் வாயினின்று குதலைமொழி பேசும் சிறுவன் உயிருடன் வருவித்தருளிய நின்னுடைய தமிழ் அருட் கலைக்கும் வடமொழியில் உள்ள வைதிகக் கலைக்கும் ஒப்பு நோக்கின் பொன்னிற இமயமலைக்கும் அணுவுக்கும் போல ஒப்பாகாது. எ.று.

     நீர்க்கொடிகளான தாமரை, அல்லி முதலியன வுள்ள குளமென்றற்கு “இலைக்குள நீர் தழைத்து” எனவும், அதன்கண் வாழ்ந்த முதலையை வருவித்தமை விளங்க, “அதனில் இடங்கர் உற அழைத்து” எனவும் இயம்புகின்றார். பிறந்து வளர்ந்து மொழி பயிலும் சிறுவர்கள் முதன் முதலிற் பேசுவது நிரம்பாமொழியாகிய குதலை மொழியாதலின், “தலைக்கு தலை மதலை” எனக் கூறுகின்றார். முதலையால் விழுங்கப்பட்டு இறந்த சிறுவனை உயிரும் உடல் வளர்ச்சியும் ஒருங்கே யுற வருவித்த குறிப்புப் புலப்பட, “மதலையுயிர் தழைப்ப அழைத் தருளிய” எனப் புகழ்கின்றார். இது திருவருளால் நிகழ்ந்த பேரற்புதமாகலின், அதனை, “அருட் கலை” எனவும், வடமொழி வைதிகக் கலை மிக்க தெனப் பேசப் பட்டமையின் அதனை “வடகலையின் முதற்கலை” எனவும் கூறுகின்றார். தமிழ் அருட் கலையின் உயர்வு காட்டற்குப் பொன் மலையை எடுத்துரைக்கின்றார். பொன்னிற முடிகளையுடைமையால் இமயத்தைப் பொன்மலை யெனப் புகல்கின்றார். சான்றோர் அதனைப் “பொற் கோட்டு இமயம்” எனப் புகல்வர். கணக்கு - ஈண்டு ஒப்புப் பொருட்டு.

     இதனால், திருப்புக் கொளியூர் அவிநாசியில் நடந்த அற்புதத்தை நினைந்து வியந்தவாறாம்.

     (3)