3250.

    வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை
    ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான்
    பாதமலர் நினதுதிருப் பணிமுடிே­மற் படப்புரிந்த
    மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே.

உரை:

     வன்றொண்டப் பெருமானே, வேதம் முதலாகவுள்ள கலை நிரம்பிய நூல்கள் மிகவும் விரைவுடன் எண்ணிறந்த முறையில் ஓதியும் அணுவளவும் உணரமுடியா தொழிந்த எம்பெருமானாகிய சிவனது திருவடித் தாமரை நினது திருமுடியில் தாே­ம பொருந்துமாறு நீ செய்த தவம் யாதோ? எமக்குத் தெரிவித் தருளுக. எ.று.

     வேத முதலிய கலைகள் என்றது வேத முதலாகிய கலைநூற் பலவும் கற்றுணர்ந்த பெருமக்களை, அனந்த முறை - எண்ணிறந்த முறை ”வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே” (சிவபு) என்பர் மணிவாசகப் பெருமான். கூறுதலால், இறைவன் திருவடி காண் அதன் அருமை காணலாம். ஆர்வ மிகுதி தோன்ற, “விரைந்து விரைந்து” என அடுக்குகின்றார். பணி வொழுக்கம் விளங்கப் “பணி முடி” எனப்படுகிறது. வேதங்களால் எய்த முடியாத திருவடி, திருவதிகைச் சித்த வடமடத்தில் தாமாகவே வந்து பொருந்தின வென்பது வரலாறாதலின், “நினது திருமுடி ே­மற்படப் புரிந்த மாதவம் யாது? உரைத்தருள்க” என வேண்டுகிறார்.

     இதனால், திருவடி தீண்டப் பெற்ற பெருநலம் வியந்து மொழிந்தவாறாம்.

     (4)