3251. ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை
ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந்
தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே.
உரை: “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்” என்று முன்னாள் பாடிச் சொன்ன பெருமை மிக்க சொற்களின் பொருளை அடியேன் ஆழ்ந்து சிந்திக்கில் என்னுடைய அருமையான மன முதலாய கரணங்கள் நீராய்க் கரைந்து முறையே இயன்று வரும் இன்பத்தில் தோய்கின்றன, காண். எ.று.
இசையின்பத்தை அமுதம் என வழங்கும் முறைமை பற்றி, இசையாய் இசைப்பயனாய் என்றவர், “இன்னமுதாய்” எனவும், உள்ளிருந்து உணரத் தகுவன உணர்த்தும் இறைவனது அருட் செயலை நினைந்த வண்ணமிருத்தலின், “என்னுடைய தோழனுமாய்” என ஆளுடைய நம்பிகள் அருளுகின்றார். அவரது அருளுரையின் பொருள் நலத்தை நெடிது நினைந்து நெஞ்சம் உருகுவது பற்றி, “சொற் பொருளை ஆழ நினைந்திடில் அருங்கரணம் கரைந்து கரைந்து” என வுரைக்கின்றார். கரணம் - மனம் சித்தம் புத்தி முதலியன. மனமுருகி நினைவின்கண் ஆழ்ந்து செல்லுகையில் படிப்படியாக இன்பம் சுரப்பது இயல்பாதலால், “ஊழியில் இன்புறுவது காண்” என்று உரைக்கின்றார்.
இதனால், “ஏழிசையாய்” என்ற திருப்பாட்டின் பொருணலம் தேர்ந்து இன்புற்றமை தெரிவித்தவாறாம். (5)
|