3252.

    வான்காண இந்திரனும் மாலயனும் மாதவரும்
    தான்காண இறைஅருளால் தனித்தவள யானையின்மேல்
    கோன்காண எழுந்தருளிக் குலவியநின் கோலமதை
    நான்காணப் பெற்றிலனே நாவலூர்ப் பெருந்தகையே.

உரை:

     திருநாவலூர்ப் பெருந்தகையே, வானுலகத்து மக்களும் இந்திரனும் திருமாலும் பிரமனும் முனிவர்களும் கண்டு வியக்கச் - சிவபெருமான் திருவருளால் ஒப்பற்ற வெள்ளை யானையின் மேல் சேரமானாகிய, கழறிற்றறிவார் கண்டு பரவக் கயிலைக்கு நீ எழுந்தருளிய போது விளங்கிய கோலத்தை, நான் காணப்பெறா தொழிந்தமை நினைந்து மெலிகின்றேன். எ.று.

     வான் - வானுலகத்தில் வாழும் மக்களாகிய தேவர்கள், மாதவர் பெரிய தவச் செல்வத்தையுடைய முனிவர்கள், தவள யானை, வெண்ணிறத்தையுடைய யானை, “வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை யருள் புரிந்து, ஊனுயிர் வேறு செய்தான்” எனவும், “விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல் என்னுடல் காட்டுவித்தான்” எனவும், இந்திரன் மால் பிரமன் எழிலார் மிகு தேவரெல்லாம், வந்தெதிர் கொள்ள வெள்ளைமத்த யானையருள் புரிந்து” (நொடித்) எனவும் நம்பியாரூரரே எடுத்து மொழிகின்றார். நெஞ்சிற் காண விளங்கும் கோலத்தைப் புறக் கண்களாற் காண மாட்டாமைக்கு வருந்துவது குறிப்பு.

     இதனால், கயிலை சென்ற கோலம் காண மாட்டாமை நினைந்து பரிந்தவாறாம்.

     (6)