3253.

    தேன்படிக்கும் அமுதாம்உன் திருப்பாட்டைத் தினந்தோறும்
    நான்படிக்கும் போதென்னை நானறியேன் நாஒன்றோ
    ஊன்படிக்கும் உளம்படிக்கும் உயிர்படிக்கும் உயிர்க்குயிரும்
    தான்படிக்கும் அனுபவங்காண் தனிக்கருணைப் பெருந்தகையே.

உரை:

     ஒப்பற்ற கருணை யுருவாகிய பெருந்தகைப் பெருமானே தேன் பெய்து வடித்த அமுது போலும் உன்னுடைய திருப்பாட்டை நாடோறும் நான் படிக்கும் போது என்னையே நான் அறிவதில்லை; ஏனெனில், படிக்கின்ற போது என்னுடைய நா மாத்திர மன்று; எனது உடம்பிலுள்ள ஊனும் படிக்கும்; உள்ளமும் படிக்கும்; உள்ளே யுலவும் உயிரும் படிக்கின்றது; உயிர்க்குயிரும் படிக்கின்றது; இஃது அனுபவமாகும். எ.று.

     ஆளுடைய நம்பிகட்கு நிகர் அவரேயாதலின், “தனிப் பெருந்தகை” யென்றும், அருளே திருமேனியாகக் கொண்டமை கண்டு, “கருணைப் பெருந்தகையே” என்றும் இயம்புகின்றார். இனிய ஓசையும் செஞ்சொல்லும் நன்பொருளும் கொண்டு அமைந்தவையாதலின், “திருப்பாட்டு” எனச் சிறப்பித்து அதனை நாளும் தொடர்ந்து படிக்கும் செயலை விதந்து, “தினந்தோறும் நான் படிக்கும் போது” எனக் கூறுகின்றார். இசை கூட்டிப் பாடும் கருவியாதலின், “நா ஒன்றோ” என எடுத்தோதி, அப்பாட்டின் பொருணலங்களை யுணர்ந்து இன்புறும் கருவிகளை ஒவ்வொன்றாக வகுத்து, “ஊன் படிக்கும் உளம் படிக்கும்” எனவும், அவற்றிற்கு உள்ளுறும் உயிரை எடுத்து “உயிர் படிக்கும் உயிர்க்குயிரும் படிக்கும்” எனவும் இசைக்கின்றார். உயிர்க் குயிராகிய இறைவனும் என்னுள் இருந்து படிக்கின்றான் எனக் காட்டுதற்கு “உயிர்க் குயிரும் தான் படிக்கும்” என வுரைக்கின்றார். ஊன் முதலாகிய இவற்றின் வேறாக நான் இல்லையாதலின், என்னை நான் அறிகிலேன் என்பாராய், “என்னை நான் அறியேன்” என்று கூறுகின்றார்.

     இதனால் திருப்பாட்டனுபவம் கூறியவாறாம்.

     (7)