3254.

    இன்பாட்டுத் தொழிற்பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்
    உன்பாட்டுக் குவப்புறல்போல் ஊர்பாட்டுக் குவந்திலர்என்
    றென்பாட்டுக் கிசைப்பினும்என் இடும்பாட்டுக் கரணமெலாம்.
    அன்பாட்டுக் கிசைவதுகாண் அருட்பாட்டுப் பெருந்தகையே.

உரை:

     திருவருட் பாட்டுக்களைப் பாடும் பெருந்தகையை யுடைய பெருமானே, உயிர்கட்கு இன்ப முண்டாகும் பொருட்டு ஐந்தொழில் புரிபவனாகிய கூத்தப் பெருமான், உன்னுடைய திருப்பாட்டுக்கு உவகையுறுவது போல் ஊரவர் பாடும் பாட்டுக்களை யுவத்தல் இலர் என்று யான் என் பொருட்டுச் சொன்னாலும் என்னுடைய துன்பக் கருவி கரணங்கள் யாவும் சிவன்பால் அன்பு செய்வனவாயின, காண். எ.று.

     திருவருளாற் பாடுவார்க்கு அவ்வருள் ஞானமும் செல்வமும் நல்கும் பாட்டாதல் பற்றி, ஆளுடைய நம்பிகளின் பாட்டை “அருட் பாட்டு” என்றும், அதனால் உளதாகிய தகைமையை வியந்து ‘பெருந்தகையே’ என்றும் பரவுகின்றார். உயிர்கள் யாவும் பிறவாப் பேரின்பம் பெறல் வேண்டும் என்பது கருதிப் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் தான் செய்தொழுகும் திறத்தை அவன் ஆடும் திருக்கூத்துப் புலப்படுவது விளங்க, “இன்பாட்டுத் தொழில் பொதுவில் இயற்றுகின்ற எம்பெருமான்” என்று கூறுகின்றார். இன்பு ஆட்டுத் தொழில் - இன்பம் நல்கும் திருக்கூத்தாடுவதாகிய தொழிலைச் செய்யும் (எம்பெருமான்) என இயையும். உவப்புறல் - மகிழ்தல். ஊர்களில் வாழும் பிற புலவர்கள் பாடுவனவற்றை “ஊர் பாட்டு” என்று உரைக்கின்றார். ஊர் அயன்மை தோன்ற நின்றது. “ஏதிலர் என்னும் இவ்வூர்” (குறள். 1130) என்றார் போல. தன் தனிமை விளங்க, “யான் என்பாட்டுக் கிருந்தேன்; நீ உன்பாட்டுக் கிரு” என வரும் உலக வழக்கு; காரண காரிய நினைவின்றி இருத்தலுமாம். துன்பத்துக் கேதுவாகிய வினைவகை யனைத்துக்கும்மன முதலிய கரணங்கள் காரணமாதலால், “இடும் பாட்டுக் கரணம்” என இசைக்கின்றார். அன்பு ஆட்டுதல் - அன்பு செய்தல்.

     இதனால், காரண காரிய நினைவின்றிப் படிக்கினும் மன முருக்கி இன்புறுத்துவது சுந்தரர் திருப்பாட்டு என்றவாறாம்.

     (8)