3255. பரம்பரமாம் துரியமெனும் பதத்திருந்த பரம்பொருளை
உரம்பெறத்தோ ழமைகொண்ட உன்பெருமை தனைமதித்து
வரம்பெறநற் றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்என்
தரம்பெறஎன் புகல்வேன்நான் தனித்தலைமைப் பெருந்தகையே.
உரை: ஒப்பற்ற கருணை யுருவாகிய பெருந்தகைப் பெருமானே, மேலும் கீழுமாகிய துரிய பதத்தின்கண் எழுந்தருளும் பரமசிவமாகிய மெய்ப்பொருளை வன்மையுற்ற தோழனாகக் கொண்ட உமது பெருநிலையை எண்ணி நல்வரம் பெறுதற் பொருட்டு? தெய்வமாயின உயிர்வகை யாவும் வழிபடும் எனச் சான்றோர் உரைக்கின்றன ரெனில், யான் திருவருட்பேற்றுக்குரிய தகுதி பெற யான் யாது சொல்வேன். எ.று.
பரம் - மேல். பரம்பரம் என்ற அடுக்கு மேன்மை மிகுதி குறித்ததாம். கீழாலவத்தைக்கண் அதீதத்திலிருந்துகொண்டு மேனோக்குவார்க்குத் துரியத்தின்கண் காணப்படுவது பற்றி, “துரிய பதத்திருந்த பரம்பொருள்” என்று சொல்லுகின்றார. சாக்கிரத்திலிருந்து கீழ் நோக்கிச் செல்வது கீழாலவத்தை; அதீதத்திலிருந்து மேனோக்குவது மேலாலவத்தை என அறிக. அதீதத்திலிருந்து காணுங்கால் துரியத்தில் அகளமாய் விளங்கும் பரசிவத்தைச் சகள வடிவில் தோழனாகக் கொண்ட அருமையை வியந்து “தோழமை கொண்ட உன் பெருமை” எனக் கூறுகிறார். மதித்தல் - உயர்வாக எண்ணுதல். தெய்வங்களும் செத்துப் பிறப்பனவாதலின், உரம் பெறு தோழராதலை வியந்து சுந்தரப் பெருமானைத் துதிக்கின்றனர் என்பாராய், “வரம் பெற நற்றெய்வமெலாம் வந்திக்கும் என்றால்” என இசைக்கின்றார். யான் வரம் விழையேனாயினும் திருவருள் ஞானப் பேற்றுக்குரிய தகுதி பெற விரும்புகின்றேன் என்பார், “என் தரம் பெற என் புகல்வேன்” என்று மொழிகின்றார்.
இதனால், சுந்தரரை வழிபட்டு ஞானத் தரம் பெற விரும்புகின்றமை புலப்படுத்தவாறாம். (9)
|