3256. பேரூரும் பரவைமனப் பிணக்கறஎம் பெருமானை
ஊரூரும் பலபுகல ஓரிரவில் தூதன்எனத்
தேரூரும் திருவாரூர்த் தெருவுதொறும் நடப்பித்தாய்
ஆரூர நின்பெருமை அயன்மாலும் அளப்பரிதே.
உரை: நற்புகழை யுடைய பரவையார் மனத்தில் உண்டான ஊடலைத் தீர்க்கும் பொருட்டுச் சிவபெருமானை ஊரவர் பலரும் பலவாறு பேசுமாறு ஒருநாள் இரவில் பரவையார் மனைக்குத் தேர்கள் இயங்கும் திருவாரூர்த் தெருவின்கண் தூதனாக நடந்து செல்வித்தாய்; அதனால் உனக்குளதாகிய பெருமை பிரமன், திருமாலாகிய இருவராலும் அளத்தற்கரியதாகும். எ.று.
காதலனும் காதலியுமாகிய இருவரிடையே காதலன்பால் ஊடலும் கூடலும் நிகழ்வ தியல்பாகலின், ஒருகால் பரவையார் மனத்தின்கண் ஊடலுணர்வு எழுதலும், அதனால் அவருடைய பிணக்கறுத்தல் வேண்டிய சூழ்நிலை யுருவாய திறத்தை, “பேரூரும் பரவை மனப்பிணக்கற” என்றும், இருவர்க்கும் இடையே நின்று பிணக்கைத் தீர்த்தற் பொருட்டுச் சுந்தரர் சிவனை வேண்டினமையின், “பெருமானை” என்றும், பிணக் குண்டாகும் கூடற் குரிய இரவுப் பொழுதாதல் பற்றி, “ஓரிரவில்” என்றும், சிவனைப் பரவை மனைக்கு நடந்து செல்ல விடுத்தமை விளங்க, “திருவாரூர்த் தெருவு தொறும் நடப்பித்தாய்” என்றும் கூறுகின்றார். பலர் வழங்காத் தெருவன் றென்றற்குத் “தேரூரும் திருவாரூர்” எனவும், மிகப் பலர் காணச் சென்றமையின், “ஊரூரும் பல புகல” எனவும் உரைக்கின்றார். பெண் கூட்டம் வேண்டித் தூது போதல் சிறப்பன்மையின், “தூதன்” என எனக் குறிக்கின்றார். என, என்று கண்டோர் சொல்ல.
இதனால், சிவனைப் பரவை மனைக்குத் தூது விடுத்தமை வியந்தவாறாம். (10)
|