12. ஆளுடைய அடிகள் அருண்மாலை
அஃதாவது, மாணிக்கவாசக அடிகளின் மாண்பு நினைந்து, பரவும் பாமாலை என்பதாம். மாணிக்க வாசகரை மாணிக்கவாசக சுவாமிகள், மணிவாசகப் பெருமான், திருவாதவூரடிகள் என்றெல்லாம் சான்றோர் புகழ்வர். அவரை அறிவாற் சிவனே எனக் கருதினமையின், அடிகள் எனச் சிறப்பித்து ஆளுடையடிகள் எனக் குறிக்கின்றார். இதன்கண், மணிவாசகர் பொருட்டு இறைவன் குதிரைச் சேவகனாய் வந்ததும், மண் சுமந்து மாறன் பிரம்படி பட்டதும், தில்லைச் சிதாகாசத்தில் கலந்ததும் குறிக்கப்படுகின்றன. திருவாசகத்தைப் படித்தெய்தும் அனுபவ நலமும், திருவண்டப் பகுதியில் “இருப்பதாக்கினன்” என்ற தொடர் பற்றிய சிந்தனையும் அதன் ஞான மாட்சியும் பிறவும் விதந்து ஓதுவதையும் காணலாம்.
கொச்சகக் கலிப்பா 3257. தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க
வாசகனே ஆனந்த வடிவான மாதவனே
மாசகன்ற நீதிருவாய் மலர்ந்ததமிழ் மாமறையின்
ஆசகன்ற அனுபவம்நான் அனுபவிக்க அருளுதியே.
உரை: அருளொளி பரந்த மனத்தில் இனிக்கின்ற தொள்ளமுதமான மாணிக்கவாசகப் பெருமானே, ஆனந்த வுருவுடைய பெரிய தவச் செல்வனே, குற்றமில்லாத நீ யுரைத்தருளிய தமிழ் மறையாகிய திருவாசகத்தின் மறுவற்ற சிவானுபவத்தை எளியவனாகிய யானும் அனுபவிக்க அருள் செய்க. எ.று.
அருள் ஞான வொளி திகழும் உள்ளம், உண்மை யன்பு மயமாய் விளங்குவதாகலின்,
“தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே” எனக் கூறுகின்றார். ஞானம், ஈசன்பால் அன்பு என்பர் சான்றோர். ஞானமும் அன்பும் இன்ப மயமாதலால் “இனிக்கின்ற தெள்ளமுதே” என இயம்புகிறார். அன்புருவாய மாணிக்கவாசகர் ஞானனானந்த வடிவினரென்றற்கு “ஆனந்த வடிவான மாதவனே” எனவும், அஃது அவர்க்கு முன்னைத் தவத்தால் உளதாய தென்பது புலப்பட, “மாதவனே” எனவும் சொல்லுகிறார். “நானேயோ தவம் செய்தேன்” (ஏசறவு) என மணிவாசகரே யுரைப்பது காண்க. மாணிக்க வாசகரென்பது சிறப்புப் பெயர்; வாதவூரர் என்பது இயற்பெயர். மாசு - மலத்தால் உளதாகும் குற்றம். தமிழ் மாமறை - திருவாசகம். வடநூல் மறைகளிற் காண்டற்கரிய நுண்மாண் பொருள்களைத் தன்னகத்தே கொண்டிருத்தலின், திருவாசகத்தை “மாமறை” எனவும், தூய செந்தமிழில் ஆகியிருத்தலால் “தமிழ் மாமறை” எனவும் சிறப்பிக்கின்றார். திருவாசகத்திற் பெறலாகும் அனுபவம் சிவஞானானுபவமாதல் பற்றித் “தமிழ் மாமறையின் அனுபவம் நான் அனுபவிக்க அருளுதி” என வேண்டுகின்றார்.
இதனால், திருவாசக அனுபவம் சிவஞானானுபவம் எனக் குறித்தவாறாம். (1)
|