3258. கருவெளிக்குட் புறனாகிக் கரணமெலாங் கடந்துநின்ற
பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றோர்
குருவெளிக்கே நின்றுழலக் கோதறநீ கலந்ததனி
உருவெளிக்கே மறைபுகழும் உயர்வாத வூர்மணியே.
உரை: வளத்தாற் உயர்ந்த திருவாதவூர் மணியே, பிண்ட வானத்தின் அகமாகியும் புறமாகியும் கருவி கரணங்களைக் கலந்து அப்பால் நின்ற பெருவெளியாகிய ேமலுலகின்கண் வாழ்தற்கு ஆசை மிகுந்து நெடிது காலம் வீணில் அலைகின்றார்கள்; நிறமுடைய வானம் சூழ்ந்த உலகின்கண் அவர்கள் இருந்து வருந்தக் குற்றமின்றாக, நீ கலந்தருளிய ஒப்பற்ற ஞானாகாயத்தை வேதங்கள் புகழ்கின்றன காண். எ.று.
கருவெளி - அண்டத்தின்கண் விண், காற்று, தீ, நீர், நிலமாகிய பூதங்கட்குக் காரணமானதன் மாத்திரைகள் தங்குகின்ற அண்ட வானவெளி. இதனைப் பரிபாடல் “கருவளர் வானம்” (பரி. 2) எனக் கூறுகிறது. ஈண்டுக் கருவெளி யெனப் பொதுப்படக் கூறுதலின், அண்ட வானமும், பிண்டமாகிய உடற்குள் அமைந்த கருவறை (கருப்பை)க்கண் உள்ள வானமும் கொள்ளப்படுமாயினும், உடற்கண் உள்ள கருவி கரணங்களைக் கூறுதலால், உடல் தோன்றுதற்கு முதலாகிய கருவெளியே கொள்ளப்படுகிறது. உடம்பும் ஏனைக் கருவி கரணங்களும் உள்ளும் புறமும் கலந்து கடந்திருப்பது பூதாகாயம்; அது நிலவும் பெருவெளி மண்ணும் விண்ணுமாகிய உலகுகளைக் கொண்டதாம். இப் பெறுவெளியிற் கலந்திருந்து மகிழ்தற்கே உலகவர் வருந்தி முயல்கின்றார்களாதலால், “பெருவெளிக்கு நெடுங்காலம் பித்தாகித் திரிகின்றார்” என்று பேசுகின்றார். பித்து - பேராசை. வானம் முதல் நிலம் ஈறாகக் கூறப்படும் பூதங்கட்கு நிறம் கூறுபவாதலின், அவற்றைத் தன்கண் கொண்ட அண்ட வெளியைக் “குருவெளி” என உரைக்கின்றார். குரு - நிறம். “பொன்பார் புனல் வெண்மை பொங்கு மனல் வெப்பு, வன்கால் கருமைவளர் வான் தூமம் என்பார்” (உண். விளக். 5) எனச் சான்றோர் உரைப்ப தறிக. மணிவாசகர் முடிவிற் கலந்து கொண்ட சிவஞான வின்ப வெளியை, “நீ கலந்த உருவெளி” எனவும், அதனை வேதம் சிதாகாசம் எனப் புகழ்தல் பற்றி, “மறை புகழும்” எனவும் இயம்புகின்றார். உருவெளிக்கு என்பதிற்குவ்வுருபு ஐயுருபின் பொருளில் வந்து மயங்கிற்று.
இதனால், உலகவர் பெருவெளி வாழ்வு குறித்து நெடிது திரிந்து அலைகின்றவர்களாக, மணிவாசகர் கலந்து கொண்ட சிதாகாச வெளியை வேதங்கள் புகழ்கின்றன வென்று போற்றியவாறாம். (2)
|