3259. மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம்
என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க
அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர்
இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே.
உரை: அழகிய வாதவூர்த் தலைவராகிய மணிவாசகப் பெருமானே, பெரிய புருவ நடுவிடமான இலாடத்தானத்தை முதலாகக் கொண்ட யோகாவத்தைக்கண் மனதை நிறுத்தி நெடுநாள் இருந்து, எலும்புருவாகித் தவம் புரிபவர் அனைவரும் ஏமாந் தொழிய நீ அன்புருவம் பெற்று, பின்பு அருளுருவம் பெற்று, பின்னர் இன்ப வுருவமாகிய சிவமாயினாய்; இதனை என்னென்பது. எ.று.
சாக்கிராவத்தைக்கும் யோகக் காட்சிக்கும் புருவ நடு தலைமையிடமாதலின், “மன்புருவ நடு” எனச் சிறப்பிக்கின்றார். யோக முயற்சிக்கண் மனம் செயலற்று இலாடத்தே யொன்றி விடுதல் தோன்ற, “மனம் புதைத்து” என்றும், உண்டி உறக்கம் பசி முதலிய உணர்வின்றி நெடுநாள் யோகிருத்தலால் பூத வுடம்பு கரைந்து எலும்புருவாதலால், “என்புருவாய்த் தவஞ் செய்வார்” என இயம்புகின்றார். தவயோகத்தால் பயன் பெறாமை புலப்பட, “ஏமாக்க” என வுரைக்கின்றார். உலகயியலில் அன்பராய், அருணெறியில் அருளாளராய்ப் பிறங்கினமை பற்றி, “அன்புருவம் பெற்றதன் பின் அருளுருவம் அடைந்து” எனவும், முடிவில் சிவானந்த ஞான வுருவுற்றுச் சிவமாயினமை விளங்க, “இன்புருவமாயினை” எனவும் எடுத்தோதுகின்றார்.
இதனால் திருவாதவூரர் சிவமாயின தன்மை தெரிவித்தவாறாம். (3)
|