3260.

    உருஅண்டப் பெருமறைஎன் றுலகமெலாம் புகழ்கின்ற
    திருஅண்டப் பகுதிஎனும் திருஅகவல் வாய்மலர்ந்த
    குருஎன்றெப் பெருந்தவரும் கூறுகின்ற கோவேநீ
    இருஎன்ற தனிஅகவல் எண்ணம்எனக் கியம்புதியே.

உரை:

     உருக் கொண்டு விளங்குகின்ற உலகப் பெருமறை யென்று கற்றவர் திரளெல்லாம் புகழ்ந்து பேசும், திருவண்டப் பகுதி யென்று சொல்லி யருளியுள்ள ஞானாசிரியர் என்று, எத்தகைய தவப் பெருமக்களும் உரைத்துப் போற்றுகின்ற தலைவனே, “என்னையும் இருப்பதாக்கினன்” என்ற ஒப்பற்ற அவ்வகவலடிக்குக் கருத்து இஃது என்று தெரிவித்தருள்க. எ.று.

     உலகினரான நாம் கண்டறிய விளங்குகின்ற உலகை “உருவண்டம்” என வுரைக்கின்றார். திருவண்டப் பகுதி திருவாசகத்துள் காணப்படும் அகவற்பாக்களில் ஒன்று. இதன்கண் “அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்” தொடக்கத்தில் குறிக்கப்படுவது பற்றி, இது திருவண்டப் பகுதி எனப்படுகிறது. குரு - ஆசிரியர்; இதனுள் சிவஞானச் செம்பொருள் கூறுவது கொண்டு, ஈண்டு ஞானாசிரியர் என உரை கூறுகிறது. இரு வென்ற தனியகவல், “இருப்ப தாக்கினன்” என்ற அகவலடி. அகவலின் கண், “ஒள்ளிய கன்னற் கனிதேர் களிரெனக் கடை முறை என்னையும் இருப்பதாக்கினன்” என வருவது, “ஒள்ளிய கரும்பையும் இனிய கனியையும் தெரிந்துண்ணும் களிறு போல, இறுதிக்கண் என்னையும் இருப்ப தொன்றாக்கினான்” என்று பொருள் தரக் கண்ட வடலூர் வள்ளல், கன்னலும் கனியும் தேர்ந்துண்ணும் களிறு போலச் சிவம் தேரும் ஒன்றாக்கினன் என்னாமல் “இருப்பதாக்கினன்” என்பதற்கு மணிவாசகர் கருத்து யாதாகலாம் எனச் சிந்திக்கின்றமை விளங்க, “எண்ணம் எனக்கு இயம்புதியே” என வேண்டுகிறார். வடலூர் வள்ளல் நினைவு வழிச் சென்று நோக்குங்கால், “ஒள்ளிய கன்னற் கனி தேர் களிறெனக் கடை முறை என்னையும் இருப்பதாக்கினன்” என்பதில், ஒள்ளிய கன்னல் பாச நீக்கத்தையும், கனி சிவப் பேற்றையும் விளக்குவதாகக் கொண்டு களிறு போலப் பாச நீக்கமும் சிவப் பேறும் எய்திச் சிவபோகத் திருத்துவதாகக் கருதத் தூண்டுகிறது. ஒன்று, முத்தான்மா. வழக்கு நூலறிஞர் இவ்வாறு பொருள் காணும் திறத்தைச் சென்டன்ஷியாலேஜிஸ் (Sententialagis) என்று கூறுவர்.

     இதனால், திருவண்டப் பகுதி யகவலடி ஒன்றின் பொருள் நலம் சிந்தித்தவாறாம்.

     (4)