3261.

    தேடுகின்ற ஆனந்தச் சிற்சபையில் சின்மயமாய்
    ஆடுகின்ற சேவடிக்கீழ் ஆடுகின்ற ஆரமுதே
    நாடுகின்ற வாதவூர் நாயகனே நாயடியேன்
    வாடுகின்ற வாட்டமெலாம் வந்தொருக்கால் மாற்றுதியே.

உரை:

     விரும்பப்படுகின்ற இன்பத்துக் குறுபொருளாகிய ஞான சபையில், ஞான மயமாய் ஆடல் புரிகின்ற திருவடிக் கீழ் மகிழ்கின்ற அரிய அமுதம் போன்றவரே, யாவரும் நயக்கின்ற திருவாதவூர்த் தலைவரே, நாயனைய அடியவனாகிய யான் எய்திய வருத்தங்களைப் போக்கி யருள்க. எ.று.

சிவநெறிச் செல்வர் எல்லாராலும் தேடி யறியப்படுவதாகலின் “தேடுகின்ற ஆனந்தச்சிற்சபை” என்றும், ஞானமும் ஆனந்தமும் நிலவுதல் தோன்ற “ஆனந்தச் சிற்சபை” என்றும் கூறுகின்றார். சின்மயம் - ஞானமயம். ஞானத் திருவுருவாய் நின்று சிவபிரான் ஆடல் புரிதலின், “சின்மயமாய் ஆடுகின்ற சேவடி” எனச் சிறப்பிக்கின்றார். ஞானத் திருவடிக் கீழ் நின்று ஆடலின்கண் விளைகின்ற ஞான வின்பத்தை நுகர்ந்து இன்ப வுருவாய் இலங்குதல் பற்றி, மணிவாசகரை “ஆடுகின்ற ஆரமுதே” என வுரைக்கின்றார். ஆடுதல் - அனுபவித்தல். செல்வ வளமும் வான வளமும் உடைமை பற்றி, யாவராலும் விரும்பப் படுவ தென்றற்கு “நாடுகின்ற வாதவூர்” எனவும், அவ்வூரவராதலின், “வாதவூர் நாயகனே” எனவும் இசைக்கின்றார். உலகியல் துன்பங்களின் நீங்கிச் சிவானந்த வாழ்வு கருதி முயல்கின்றமையின், “வாடுகின்ற வாட்டம்” என்றும், சிவானந்தத்திலேயே தன்னை இருத்துக என்பாராய். “ஒருகால் மாற்றுதி” என்றும் வேண்டுகிறார்.

     இதனால், வேறு செயலின்றிச் சிவானந்தத்திலே இருத்துக என இறைஞ்சியவாறாம்.

     (5)