3262.

    சேமமிகும் திருவாத வூர்த்தேவென் றுலகுபுகழ்
    மாமணியே நீஉரைத்த வாசகத்தை எண்ணுதொறும்
    காமமிகு காதலன்றன் கலவிதனைக் கருதுகின்ற
    ஏமமுறு கற்புடையாள் இன்பினும்இன் பெய்துவதே.

உரை:

     நலமிக்க திருவாதவூர்த் தேவரே என்று அறிஞர் கூட்டம் புகழ்கின்ற அழகிய மணி போல்கின்ற பெருமானே, நீ பாடி யருளிய திருவாசகத்தை நான் நினைவிற் கொண்டு சிந்திக்கும் போதெல்லாம் காம வேட்கை மிக்க காதலனாகிய கணவனது காமக் கூட்டத்தை விழைகின்ற தற்காப்பாகிய கற்புடைய நங்கையின் இன்பத்தினும் மிக்க இன்ப முண்டாகிறது, காண். எ.று.

     சேமம் - க்ஷேமம். உலகினர்க்குச் செல்வ நலமும், ஞானிகட்கு ஞான நலமும் சேமமாதலால், “சேமமிகு திருவாதவூர்” எனவும், சிறந்த குடித் தோன்றலாவது விளங்கத் “தேவே” எனவும், ஊரவரும் நாட்டவரும் புகழ்வது பற்றி, “உலகு புகழ் மாமணி” எனவும் ஏத்துகின்றார். ஞான நெறியிற் பண்பட்டமை புலப்பட “மாமணி” என்று கூறுகின்றார். வாசகம் - திருவாசகம். எண்ணுதல் - சொற் பொருள் நலங்களைச் சிந்தையிற் கொண்டு உன்னுதல். காதலனாயினும் காம வேட்கை மிகாவிடத்துக் கலவி கைகூடாமையின், “காமமிகு காதலன்றன் கலவி” எனவும், அதுதானும், பருப் பொருளாகாது உள்ளத்தால் உள்ளி நுகரப்படும் நுண்பொருளாதலின், “கருதுகின்ற” எனவும் இயம்புகின்றார். ஏமம் - காப்பு. மகளிருக்குக் கற்பு திண்ணிய காப்பாதலால் “ஏமமுறு கற்புடையாள்” என்றும், அவளெய்தும் இன்பம் தூய இன்ப மென்பது விளங்க “இன்பு” என்றும், அவளெய்தும் இன்பத்தினும், திருவாசகச் சொற் பொருளை எண்ணும் போது உளதாகும் இன்பம் மறுவற்ற தூய்மையுறுவ தென்றற்கு “இன்பினும் இன்பு” என்றும் இசைக்கின்றார். இன்பம் - ஈறு குறைந்து இன்பு என வந்தது.

     இதனால், திருவாசகச் சிந்தனை நல்கும் இன்பம் சிறப்பித் துரைத்தவாறாம்.

     (6)